உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73 இழிவறிந் துய்க


ஊருண் கூவல் தூருண் மண்டி
நீரிழி பட்டென யாவருந் தொட்டுப்
புதுக்கல் நந்த உணல்யா மென்றியர்
ஒதுக்கலர் நிரப்பின் ஒப்புர வாரை!
பதுக்கற் றிருவார் படுதுயர் முடைசேர் 5
முதுநீர்த் தேக்கம் மூடுநர் ஆங்க
அழிமென் றழுங்கா ராகலின்
இழிவறிந் துய்க இறைத்துண வீந்தே!


பொழிப்பு

ஊர்மக்கள் குடிநீர் கொள்ளும் கிணற்றகத்தே கும்பியுங் கசடுகளும் மிக்கு நிறைந்து நீர் நலங்கெட்டது என்று ஊரார் யாவருங்கூடி அக்கிணற்றைத் தோண்டிப் புதுக்குதல் போல, ஒப்புரவாளர் வறுமைப்பட்ட விடத்து ஊரார் அவரையும் அழைத்து யாம் உண்போம் என்பர்; அவ்வாறன்றி அவரைப் புறக்கணித்து ஒதுக்குவாரல்லர். மற்று மிகுந்த துன்பத்தை செய்கின்ற தீய நாற்றம் வீசும் நெடுநாள் நீர் தேங்கி நிற்குங் குட்டையைத் தூர்த்து மூடுவாரைப் போலப் பதுக்கி வைத்த செல்வமுடையவர்கள் துன்பமுற்றவிடத்து அவர்தங் குடும்பம் அழிந்துவிடும் என்று வருந்துவாரல்லர். அதனால் செல்வத்தைப் பதுக்கி வைத்தலால் நேரும் இழிவினை யறிந்து யாவர்க்கும் வழங்கியும் உணவளித்தும் ஒப்புரவாற்றி உய்வு பெறுமின்!

விரிப்பு

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

யாவர்க்கும் உதவியுந் துணையுமாய் நிற்கும் ஒப்புரவாளர் வறுமையுற்றவிடத்தும் ஊரார் அவரைப் புறக்கணியாது தம்மோடு உளப்படுத்திக்கொண்டு அவரைப் போற்றிக் காப்பர் என்றும், யார்க்கும் பயன்படாது செல்வத்தைப் பதுக்கி வைத்திருப்போர் துன்பமுற்றவிடத்து அவர் தங்குடும்பத்தின் அழிவு கருதி எவரும் வருந்தார் என்றும் எடுத்துரைப்பதோடு செல்வத்தைப் பதுக்கி வைத்தலின் இழிநிலையை அறிந்துணர்ந்து யாவர்க்கும் வழங்கியும் உணவளித்தும் ஒப்புரவாற்றி அறநெறியில் வாழுமாறு உலக மக்களுக்கு அறிவுறுத்துவது இப் பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/352&oldid=1251288" இலிருந்து மீள்விக்கப்பட்டது