பக்கம்:நூறாசிரியம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

331


75 இல்லெலி

கூரிள எயிற்றுக் குவிமுக இல்லெலி
போரிற் சாய்த்த புதுநெல் கொறிக்கும்
தொடரொலி படர்ந்த நெடுவல் லிரவின்
போக்குப் போலவன் வரவே
நோய்க்குநல் வரவிற் கொத்தது செலவே!

பொழிப்பு:

கூர்மையான இளமைபொருந்திய பல்லையும் கூம்பிய முகத்தையும் உடைய வீட்டகத்து எலி, கதிர்க் குவியலினின்றும் உதிர்த்துத் திரட்டிக் கொணர்ந்த புதிய நெல்லைக் கொறிக்கும் தொடர்ந்த ஒலிபடர்ந்த நெடிய வலிமை பொருந்திய இரவின் செலவு போன்றது தலைமகனின் வரவு: மற்று என் நோய்க்கு நல்வரவு கூறி வரவேற்பது அவன்றன் செலவு.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் பிரிந்து செல்லக் கருதியிருப்பதனை உணர்ந்த தோழி அதனைத் தலைமகளுக்குத் தெரிவிப்ப அவள் வருந்திக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

கூர்இள எயிற்றுக்-இல்எலி- கூர்மையான இளமை பொருந்திய பல்லையும் கூம்பிய முகத்தையும் உடைய வீட்டு எலி,

எலியின் கொறித்தல் இப்பாடலில் சுட்டப்படுதலால் அதற்கேற்பப் பல்லின் கூர்மையையும் இளமையையும் கூறினார்.

குவிமுகம்- கூம்பிய முகம்

இல்லெலி- வீட்டில் வாழும் எலி.பிற இனங்களின்றும் வேறுபடுத்தற்கு இல்லெவி என்றார்.

போரில் சாய்த்த புதுநெல் கதிர்க் குவியலின்றும் திரட்டிக் கொணர்ந்த புதிய நெல்.

போர்- நெற்கதிர்க் குவியல். சாய்த்தல் திரட்டுதல்.

கொறிக்கும் தொடர் எலி- கடித்துத் தின்னுகின்ற தொடர்ந்த ஒலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/357&oldid=1209175" இலிருந்து மீள்விக்கப்பட்டது