பக்கம்:நூறாசிரியம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

நூறாசிரியம்


79 குறிப்பறியாளே


செவிக்கின் னாத விசையிசை யிலையே
குவிமுகிழ் மூக்கே லாதன கொடிதே
யானவை கொண்டாற் றான்விழைந் தென்னுதல்
மான நீவியள் தோழி
கோணா நெஞ்சக் குறிப்பறி யாளே!

பொழிப்பு:

செவிக்குத் துன்பந்தரும் இசை இசையாகாது. குவிந்த மொக்குப் போலும் மூக்கு ஏற்றுக் கொள்ளாத வாகிய நாற்றமெல்லாம் துன்புறுத்தும் தகையவே. யான் அத்தகைய துன்பந்தரும் இசையைச் செவிமடுக்கவோ, நாற்றத்தை முகரவோ நேரின் அவற்றைப் பொறாது வருந்தும் என் தமக்குத்தலை நீக்குதல் பொருட்டு தானே விரும்பி என் நெற்றியைத் தக்கவாறு நீவிவிட்டவளாகிய என் தோழி என் கோணுதலுற்ற உள்ளக் குறிப்பை அறியாத வளாயினளே!

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் ஒருவனிடத்துக் காதல் கொண்ட தலைமகள், அயலார் சிலர் மணம் பேச வந்தவிடத்து தனக்கு அஃது உடன்பாடு இல்லை யென்பதைத் தோழி உணரும்படி குறிப்பாகப் புலப்படுத்துமாறு அமைந்தது இப்பாட்டு.

செவிக்கு இன்னாத இசை இசை இலையே - செவிக்குத் துன்பந் தரும் இசை, இசையே அன்று,

செவிக்கு இன்பம் பயப்பதே இசை எனப்படுதலின் அதற்கு மறுதலையாக இன்னாமை பயப்பது இசையன்றாம் என்றவாறு.

குவிமுகிழ் மூக்கு ஏலாதன கொடிதே - குவிந்த மொக்குப் போலும் மூக்கு ஏற்றுக் கொள்ளாதனவாகிய நாற்றமெல்லாம் துன்பந்தருவது.

யான் அவை கொண்டால் - யான் அத்தகைய துன்பந்தரும் இசையைச் செவிமடுக்கவோ, நாற்றத்தை முகரவோ நேர்ந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/368&oldid=1209384" இலிருந்து மீள்விக்கப்பட்டது