பக்கம்:நூறாசிரியம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

நூறாசிரியம்

குன்றியிருத்தலின் அம் மென்மை இளமை எனப்பட்டது.

வயிறோள் - வயிற்றோள். ஈண்டு வயிறு என்பதன் கண்ணுள்ள வல்லெழுத்து இரட்டியாமை அதன் மெல்லிமை நோக்கிப் போலும்,

குளம்பு ஒலி மடுத்து - குதிரையின் காலடி ஓசையைக் கேட்டு.

குளம்பு. குதிரைக் காலின் அடிப் பகுதி.மடுத்து-செவிமடுத்து கேட்டு.

தலைவன் வரவைத் தொலைவிலிருந்தே அறிவிப்பது அவன் ஊர்ந்து வரும் குதிரையின் குளம்பொலியாதலின் தலைவி அதனைச் செவிமடுத்து கூறப்பட்டது.

பூக்கும் இளநகை - மலருகின்ற புன்னகையை,

யானும் நின்னொடு விரைந்து காண்குவன் - யானும் உன்னுடன் விரைந்து சென்று காண்பேன்.

இரையை நினைத்து விரைகின்ற குதிரையை நோக்கி இவ்வாறு கூறினான்.

“ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியாற்
சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்
சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்"

(தொல்.செய்.201)

என்பவாகலின் ஈண்டுத் தலைமகன் பரிமாவை நோக்கிக் கூறுமாறு அமைந்தது இப்பாட்டு.

இப்பாட்டு முல்லை என்னும் அகத்திணையும் இடைச்சுரத்துத் தன் குதிரையை நோக்கிக் கூறியது என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/372&oldid=1209388" இலிருந்து மீள்விக்கப்பட்டது