பக்கம்:நூறாசிரியம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

நூறாசிரியம்


82 மானும் இளையோள்


பிறர்மனந் தூக்கி இயல்வன செய்யுந்
திறங்கொள் எலுவ திகைப்பறக் கேண்மோ
மனைக்கென் வேண்டுவ வென்பையின் மாண்டோர்
தனைக்குறிப் புணர்த்துத் தான்குறிப் பறிவே
பொழுதுசூழ் புணர்ந்து புலப்படுத் துணர்வே 5
பழுதுகண் டடங்கி விழுப்பத் துரைப்பே
படுவுழிப் படுத்து விடுவுழி விடுப்பே
வடுவில் கற்பின் நெடுநிலைக் காப்பே
என்றிவை மானும் இளையோள்
வென்றிய நிலைக்கென் வேண்டுவல் வேறே! 10

பொழிப்பு:

பிறர்தம் மனநிலையை ஆராய்ந்து அவர்தமக்கு ஏற்ற உதவியைச் செய்யும் ஆற்றல் வாய்ந்த தோழனே. இல்லாளுக்கு வேண்டும் இயல்புகள் யாவை என்று வினவுவாயாயின் கூறுவேன், மயக்கமறக் கேட்பாயாக!

மாட்சி வாய்ந்த பெரியோர் தனக்குக் குறிப்பாக உணர்த்துதலைத் தான் விளங்கிக் கொள்ளும் குறிப்பறிவாற்றலும், காலமும் சூழ்நிலையும் உணர்ந்து தன் உள்ளக் கிடக்கையைப் புலப்படுத்தும் உணர்வும் குறைபாடு கண்டவிடத்து அதனை உடனே வெளிப்படுத்தாது அடங்கியிருந்து சிறப்பினைக் கூறுமாற்றால் கூறும் சொற்றிறமும்; பொருள் வருகின்றவழி அதனைப் பாதுகாத்து வைத்துச் செலவிடத் தேவையான விடத்து அதனைச் செலவிடும் பொருளாட்சித்திறமும்; குற்றமற்ற கற்பினைக் காத்துக் கொள்ளும் உயரிய தற்காப்பும் என்னும் இந் நற்குண நற்செயல்களில் சிறந்த இளைஞையின் வெற்றி நிலைக்கு யான் வேண்டத் தக்கது வேறு யாது உளது:

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

மணஞ்செய்து கொள்ளுமாறு ஒருவனை அவன் தோழன் வற்புறத்தினானாக, நற்குண நற்செயல்களுடைய பெண்ணாயின் மணக்கத் தடையில்லை யென்று கூறியவன், பின்னும் அத்தகைய குணஞ் செயல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/376&oldid=1209393" இலிருந்து மீள்விக்கப்பட்டது