பக்கம்:நூறாசிரியம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

நூறாசிரியம்

தலைவரை உருவாக்கிய தகுதி வாய்ந்த பெருமை மிக்க தலைவன்; இடுக்கண் வந்தவிடத்தும் சிதறாத மனவுறுதி யுடையவன் குற்றமற்ற அமைச்சன்; மக்களுக்காகப் பாடுபட்ட மிகப்பெருந் தொண்டன் கருத்துச் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணும் செயலில் சிறப்புடையோன்;

தமிழ்நாட்டின் தலைமையை வடநாட்டவரும் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு அதனை உயர்த்திய ஆளுமைத்திறம் வாய்ந்தோன் எண்ணமும் சொல்லும் செயலொடு பொருந்திய உண்மை மாந்தனுக்கு ஒரு தனி எடுத்துக்காட்டாக விளங்கியோன்; இழிவான நிலைகளில் தன்னை இறக்கிக் கொள்ளாத, கடுஞ்செயல்களையுஞ் செய்து முடிக்கும் தறுகணாளன்; கருமவீரன் என்று சிறப்பிக்கப் பெற்றோன்;

உலக மக்கள் வியப்புறுமாறு அரசியல் என்னும் வானத்தின்கண் நிலவிய, நேர்மையைக் கடைப்பிடித்த உயர்ந்தோன்; செல்வர்களை ஏவி அவர்தம் செல்வத்தை ஏழையர்க்கு உதவச் செய்த, சொற்களை அளவோடு பேசும், மனம் சோர்வடையாத வினையாளன், புகழுரையை விரும்பாத, பொறுமையின் குன்றம் போன்றோன்; பழிக்கப்படாத ஆட்சியை நடத்திய தலைவன் நல்ல அரசாட்சிக்கெனத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இல்லறத்தை மேற்கொள்ளாதே துறந்த, நல்ல அறநெறியில் நடக்கும் துறவோன்; ஏழை மக்களுள் முன்னேற அவர்க்கு உதவி புரிந்த எளிமையான வாழ்வினன்; ஊழ்வினையைப் புறங்காட்டியோடச் செய்த ஆள்வினையாளன்; பள்ளிகளில் இலவயக் கல்வியைத் தமிழ்நாடெங்கனுந் தொடங்கிய திறப்பாடுடையான் இப் பெருமகனை வாழ்த்துக நெஞ்சமே!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவராகவும் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சராகவும் அனைத்திந்திய பேராயக் கட்சியின் தலைவராகவும் விளங்கிய கருமவீரர் காமராசர் மறைவுற்ற காலை அவர்தம் அரும் பணிகளையும் பெருஞ் சிறப்புகளையும் நினைவு கூர்ந்து பாடியது இப்பாட்டு.

காமராசு என்னும் - காமராசர் (காமராஜ்) எனப்படும் இயற்பெயரை யுடையவனும்

கடமை மாமலை -கடமையை உணர்ந்து அதனைச் செய்து நிறைவேற்றுதற்கண் பெருமலைபோல் உயர்ந்து விளங்கியவனுமான பெருமகன்.

தாம்இணை கானா அரசியல் தந்தை -மக்களுள் யாரும் தமக்கு ஒப்பாக வைத்து எண்ணிப் பார்க்க இயலாதவாறு உயர்ந்த அரசியல் தந்தை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/386&oldid=1209664" இலிருந்து மீள்விக்கப்பட்டது