பாவலரேறு பெருஞ்சித்திரனார்
361
அரசியல் தந்தை என்றது அரசியல் அமைப்பை உருவாக்கும் ஆற்றலாளன் என்பது கருதி.
தலைமையை ஆக்கும் தகுபெரும் தலைவன் - அரசியலைத் தலைமை தாங்கி நடத்த வல்லாரை உருவாக்கும் தகுதி வாய்ந்த பெருந்தலைவன்.
ஆட்சியமைப்பிலும் கட்சியமைப்பிலும் பல்வேறு படிநிலைகளில் இருந்து செயல்படத் தக்க தலைவர்களை இனங்கண்டும், பயிற்சியளித்தும் அமர்த்தும் தகுதியுடையான் என்றார். இவ்வாறு தலைவர்களை ஆக்குந் திறத்தான் பெருந்தலைவன் என்றவாறு,
பண்டிதர் சவகர்லால் மறைவுக்குப் பிறகு இலால் பகதூர் சாத்திரி தலைமையமைச்சரானதும், அவ்வாட்சிக் காலத்திலேயே இந்திரா அம்மையார் அமைச்சராக அமர்த்தப் பெற்றமையும், சாத்திரியார் மறைவுக்குப் பின் இந்திரா அம்மையார் தலைமையமைச்சரானதும் இன்ன பிறவும் காமராசர் தலைவரை ஆக்கும் தலைவர் என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகளாம்.
மக்களுக்கு உழைத்த மாபெரும் தொண்டன் - மக்களுக்காக உழைத்த மிகப்பெருந் தொண்டன்.
கோயிலுக்கும் மடத்துக்கும் குருமார்க்குந் தொண்டு செய்தலின்றி மக்களுக்காகத் தொண்டு செய்தவன் என்றலின் மாபெருந் தொண்டன் என்றார்.
சிக்கலை அவிழ்க்கும் செயல் சீராளன் - கருத்துச் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணும் செயலில் சிறப்புடையோன்.
சிக்கல் என்னுஞ் சொல் நூலில் விழுஞ் சிக்கலையே முதற்பொருளாகக் கொண்டதாகலின் அதற்கேற்ப அவிழ்க்கும் என்றார்.
தமிழகத் தலைமையை ...... வல்லோன் - தமிழ்நாட்டினின்றுஞ் செல்லும் தலைமைத் திறம் வாய்ந்தாரை வட நாட்டவர்களும் மறுக்க வியலாது ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உயர்த்திய ஆளுமைத் திறம் வாய்ந்தோன்.
தமிழ்நாட்டவரின் தலைமையை ஏற்றுக் கொள்ள வடநாட்டவர்கள் இயல்பாக இசையார் எனினும் அவர்களும் மறுக்க வியலாது ஒப்புமாறு ஆளுமைத் திறத்தால் உயர்த்தினான் என்க:
மூத்த தலைவர்கள் ஆட்சிப் பதவியைத் துறந்து கட்சிக்குத் தொண்டாற்ற முன்வரவேண்டும் என காமராசர் கொண்டுவந்த திட்டம் பண்டிதர் சவகர்லால் தலைமையமைச்சராக இருந்த ஞான்றே ஏற்றுக்கொள்ளப்பட்டு கா (K) திட்டம் என்னும் பெயரில் செயலுக்கு கொண்டுவரப்பட்டமையும், காமராசர் அனைத்திந்திய பேராயக் கட்சியின்