பக்கம்:நூறாசிரியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நூறாசிரியம்

அரலை - பெருமணல்; நுங்குதல் - மிகுவாகத் தோற்றுதல்;

புரை - நிலத்தின் உட்டுளை

உள்ளோடிப் புறம் நடக்கும் - அடிப்புறம் விரைந்தும், மேற்புறம் விரைவு குறைந்தும் நடையிடும் வெள்ளத்தின் இயல்பாந்தன்மை உணர்வு நிறைந்த உள்ளத்தின் தன்மையும் அதுபோல் என்க. புறத்தே நோக்குவார் உள்ளோட்டம் அறியார் ஆகலின் அவ்வாறு கூறலாயிற்று. உணர்வு நிரம்பிய உள்ளம், புதுப்புனல் வெள்ளத்திற்கும், அது பரந்து செல்லும் தன்மை அவ்வுள்ள உணர்விற்கும், பரல் பெருத்த வினைகளுக்கும், அரலை சிறு வினைப்பாட்டிற்கும், அவற்றில் பரந்து தோன்றும் நுரை அவ்வினைப்பாடுகளால் மீதூரும் இன்ப துன்பத்திற்கும், உட்டுளை காலத்திற்கும், அதனுள் ஒரளவு வெள்ளம் புகுந்து கரவுதல், காலத்தால் அவ்வுணர்வின் ஒரு பகுதி மறைந்து போதற்கும், பொருந்தக்கூறி, உள்ளத்தின் ஆளுகையே உணர்வு சான்ற புலவன் ஒருவனின் வாழ்க்கை என்று உருவகித்துக் கூறியதென்க. என்னை? உள்ளத்தின் ஆளுகையே வாழ்க்கையாயின் அறிவின் ஆளுகை எதுபோலாம் எனின், அமைச்சு போலாம் என்க.அறிவு அமைச்சு போலும், உள்ளம் அரசு போலும் நின்று ஆள்வதே உணர்வு வாழ்க்கை எனக்கொள்க. இனி, உணர்வற்றார் வாழ்க்கை இருள் நிரம்பிய உள்ளம் போலும், மருள் நிரம்பிய அறிவு போலுமாகித் துன்பம் சேர்ப்பதாம் என்க.

சொல்லிற் போகா நினைவு - நினைவோட்டத்திற்குச் சொற்களே வாய்க்கால் ஆகலின், அதன் வழிக் கழியாத நினைவுகள் என்றபடி நினைவு. நிலைத்த எண்ணங்கள். நில்- முதனிலை,

முட்டுதல் - புனல் நிரம்பிக் கழிவாயை முட்டுதல் செய்தல் போல், உணர்வுச் சுவரை நிரம்பிய எண்ணங்கள் முட்டி நிற்பது.

விழிக்கும் துயிலும் - தாமே நிகழ்பவாகலின் விழிக்கும் துயிலும் எனலாயிற்று. விழிப்புநிலை பகலுக்கும், துயிலுநிலை இரவுக்கும் உரியவாயிருக்க, மாறாகச் செயல்படுவது உணர்வோட்டம் தொடர்ந்து நடக்குமாகவின் என்க.

பாடுவாய் - வாயுரை, வாய்பாடு என்பது மாறி வந்தது. படுத்தல் - செய்தல்.

செந்நெறி - செவ்வியநெறி. நயக்கும் - விரும்பி ஏற்கும்.

ஆன்றல் - நிறைதல்.

புனல்காய்க்கும் - கதிரென்கோ புனல் பாய்தலால் அதன் விரைவு தாளாது சாயும் புல்லைப் போலவும், அனல் காய்தலால் அதன் சூடு தாளாது உருகும் மெழுகைப் போலவும், விரிந்து சிறகார்ந்த முகிற் கூட்டத்துள் ஒடுங்கிய கதிர் போலவும் எம்முடல் ஆட்பட்டு நிற்கின்றது என்பதாம். புனலால் சாய்க்கப் பெறும் புல் தன் வலியிற் குன்றி நீரின் வலிக்குத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/40&oldid=1221124" இலிருந்து மீள்விக்கப்பட்டது