பக்கம்:நூறாசிரியம்.pdf/423

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

397


உறைப்பு உறை மிகினும் - காரம் சிறிதே மிகுந்திருப்பினும், உறைப்பு - காரம் உறை துளி - சிறிதளவு.

ஆநெய் நாறும் நறும் குழை அடினும் - ஆவின் நெய் வீச்சமுற நல்ல பொங்கல் சமைப்பினும்,

பொங்கல் நல்லதே. எனினும் புத்துருக்கல்லாது சற்றே பழைய நெய்யைச் சேர்த்தமையால் எழுந்த நாற்றத்தால் அது ஏலாதாயிற்று.

நாறுதல் ஈண்டுத் தீய நாற்றத்தைக் குறித்தது. பொங்கல் நல்லதே என்பது நறுங்குழை என்பதனால் பெறப்படும்.

சோறுபோல் உதிரியாய் இல்லாது குழையச் செய்தலின் பொங்கல் குழை எனப்பட்டது. குழை என்பதனைக் கீரை எனக் கொண்டு அதற்கேற்ப உரைப்பினுமாம்.

தவிர்தல் செய்தே - உண்ணாது விலக்கி

இகுளை - தோழி!

கவடு இன்றி விழி துவர்ப்பு ஏறக் கடிமே - கள்ள மின்றிக் கண்சிவக்குமாறு எம்மைச் சினந்து பேசுவார்.

கவடு - வஞ்சகம், வெறுப்பை மனத்தில் வைத்துக் கொள்ளாமை ஈண்டுக் குறிக்கப்பெற்றது.

துவர்ப்பு - சிவப்பு. கண்சிவத்தல் சினத்தின் மெய்ப்பாடு கடிந்து பேசுதல் கடிதல் எனப்பட்டது. கடிம்-கடியும் என்பது தொக்கு நின்றது.

மொழி இன்றி அமைவேமை- மறுமொழி பேசாது அமைதியாய் இருக்கும் எம்மை,

தன்குற்றமுணர்ந்து, அவன் கடிந்து பேசுங்கால் உடனே மறுமொழி கூறாது அமைந்திருந்தது மட்டுமின்றி அவன் கடிந்தமைக்கு வருந்திப் பின்னும் அவனொடு உரையாடாமலே இருந்தாள் என்பதும் பெறப்படும்.

பின் அணைந்து - பிறகு வந்து தழுவிக் கொண்டு.

பின் என்பது காலம் பற்றியது.

தொங்கு முகம் ஏந்தி - கவிழ்ந்த எம் முகத்தை நிமிர்த்தி, புலவியால் முகங் கவிழ்ந்திருந்தால் போலும்.

இமைபடரக் காந்தி - இமைகள் வருடுமாறு முகத்தைப் பொருத்தி,

படர்தல் வருடுதல், காந்துதல்-ஒட்டுதல்.