பக்கம்:நூறாசிரியம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

399


'97 மானுங்கடமையர்'


உற்றே மெனநீ பற்றிய ஞான்றே
முற்றும் நினக்கவள் உரியளங் குழலும்
கற்பின் மானுங் கடமையள், கரவின்று
நேர்ந்த காலையும் நெகிழ்ந்த காலையும்
ஊர்ந்தண் நினைவும் வினையும் ஒழுங்குறப் 5
பூணியற் பேணுந் தகையளே வாணுதல்!
அவளைப் பிரிவுறு மாயிடைப் பொழுதின்
குவளை விழிநீர் வார்தலை எண்ணாது
இன்னா வொழுக்கத்து நீயிவண் படுதல்
என்னமைந் துரைக்கினும் இழுக்கே எலுவ! 10
ஆயுங் காலைச் சால்பிற்கு
நீயும் உரியை அவள்தனி யன்றே!


பொழிப்பு:

காதலால் ஒன்றினேம் என்று நீ அவளை கைப்பிடித்த போதே முழுவதும் நினக்கே அவள் உரிமையுடையளாயினள். அழகிய கூத்தலையுடையளான அவளும் கற்பினால் மாட்சியமையுற்ற கடமையுடையாள். கள்ளமில்லாமல் நீ அவளொடு பொருந்தியிருந்த காலத்திலும் கைநெகிழ்ந்த காலத்திலும் உள்ளத்துப் பரவிய குளிர்ந்த நினைவும் அதற்கேற்ற செயலும் உடையளாய்ச் செம்மையாகக் கொழுநனைப் போற்றிப் புரக்கும் தகுதியுடையவளே ஒளி பொருந்திய நெற்றியை யுடையாள் அவளை நீ பிரிவுற்ற அந்த இடைக்காலத்தே அவளுடைய குவளை மலர் போலும் விழியினின்றும் நீர் வழிதலை எண்ணிப்பாராது தீயொழுக்க முடையவனாய் நீ ஈண்டு இருத்தல் என்னவாறு அமைதி கூறினாலும் குற்றமேயாம். ஆராய்ந்து பார்க்குங்கால் தும் இல்லறம் பெருமையான் நிறைவுறுதற்கு நீயும் உரிமையுடையாய், அவள் நின்னின் வேறுபட்டவள் அல்லளே.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

தலைவனொருவன் தன் மனைவியைப் பிரிந்து கட்குடியுஞ் சூதாட்டமும் வரைவின் மகளிர் தொடர்பும் உடையவனாய்த் திரிதரக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/425&oldid=1211296" இலிருந்து மீள்விக்கப்பட்டது