பக்கம்:நூறாசிரியம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

411

காட்சியொன்றும் ஆசிரியரின் கருத்தைத் தெளிவுறுத்தும் பொருத்தமான உருவகங்களாக இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.

முன்னதன்கண் அறிவே சிறகாகவும், நினைவே அதனையுடைய வண்டாகவும், மனமே அவ்வண்டு முரலும் மலர்ப் பொய்கையாகவும், நறுமலர்த் தேனே மெய்யுணர்வாகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன.

பின்னதன்கண் உடலே விளக்காகவும் நினைவே நெய்யாகவும் உயிரே திரியாகவும் மெய்யுணர்வே சுடராகவும் அலைக்கலைக்கும் உலக வாழ்க்கையே பெருங்காற்று வீசும் வெளியாகவும் கொள்ளுமாறு உருவகம் அமைந்துள்ளது.

அறிவுஎனும் விரி சிறகு ஆர்ந்து - அறிவு எனப்படும் விரியும் சிறகு பொருந்தி.

அறிவின் பரப்புக் கருதி அதனை விரிசிறகு என்றார்.

நினைவு எனும் பொறிவண்டு இமிரும் - நினைவு எனப்படும் புள்ளிகளையுடைய வண்டு முரலுகின்ற.

பொறி-புள்ளி, இமிர்தல்- ஒலித்தல், முரலுதல்.

உள்ளப் பொய்கையுள் - உள்ளம் எனப்படும் குளத்துள்.

ஒளிச்சுடர் . . . தேறல் மாந்தி - ஒளி விளங்கப் பொருந்திய ஒப்பற்ற பெருமலரின் கண்ணுள்ள மெய்யுணர்வு என்னும் தேனையுண்டு

மன்னிய - பொருந்திய ஒரு தனி ஒப்பற்ற - பெரிய தேறல் - தேன்.

ஐய - இறைவ.

ஐயன் என்னும் பெயரின் அண்மை விளி. இறைவன் எங்கும் நிறைந்திருத்தலை உணர்ந்தமையின் அண்மைவிளி போதுமானதாயிற்று.

நின் மயலுற - நின் அருளின்பத்திலே திளைத்தலால்,

மயல் - மயக்கம்; திளைத்தலின் விளைவு.

பொய்வினை கழன்று - பயனிலாச் செயற்பாடுகளினின்றும் விடுபட்டு. கழன்று-நீங்கி, விடுபட்டு.

நிற்பாடி நிற்கண்டு - உன்னைப் புகழ்ந்து நின் அருட் காட்சியைக் கண்டுனர்ந்து.

காணுதலென்றது உணர்வில் தோய்தலை,

பாடுதல்-புகழ்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/437&oldid=1223743" இலிருந்து மீள்விக்கப்பட்டது