பக்கம்:நூறாசிரியம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

நூறாசிரியம்


பருப்பொருளாகிய மண் முதலியவற்றின் சேர்க்கையும் நுண்பொருளாகிய உயிர்களின் இயக்கமும் பற்றிய கருத்துகளைத் தெளிவுபட ஆராய்ந்துணர்ந்த திறவோரே அறிவர் எனப்படுவோராவர்.

உயிர்ப்பொருள் ஒன்றொடு தொடர்ந்து இயங்கும். மெய்ப்பொருள் ஆளுமைநிலையில் அவ்வப் பொருள்களின் மீது பொருந்தியிருக்கும். பொயப்பொருளாவது உண்மைப்பொருளின் போலியேயாம்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

தலைப்பாடலான இறைநிலை வாழ்த்தில் ஒன்றிறை’ என இந் நூறாசிரியத்தைத் தொடங்கிய ஆசிரியர் இடையே உலகியல் நிலைகளைப் பலபட விரித்துரைத்து உயிர்கள், இறைமையில் தோய்ந்து நிறைநிலை யெய்துதலை விளக்குவதாக அமைந்துள்ளது இவ்வீற்றுப் பாடல்.

உயிரின் இயக்கம் எத்தகையது என்றும், அதனொடுபட்ட இறையவன் இயக்கமாவது யாது என்றும், இறைவனை இல்லவன் என்றும் இன்னான் என்றும் கூறுவார்தம் கூற்றுகள் எத்தகையன என்றும், மெய்யறிவர் யாரென்றும், உயிர்கள் உய்யுமாறு யாங்ஙனமென்றும், துய்ப்போரும் துவ்வாரும் இன்னின்னார் என்றும் இப்பாடலின் கண் விளக்குகிறார் ஆசிரியர்.

உயிரின் மாட்டே உடலின் இயக்கம் - உயிரின் பொருட்டாகவே உடலின் இயக்கம் நிகழ்கின்றது.

உயிரைச் சார்ந்தே உடல் இயங்குகின்றது. உயிர் கருத்தாவாய் நின்று உடலை இயக்குகின்றது என்றவாறு.

உயிரை உளமும் அறிவும் இயக்கு - அவ்வுயிரை உளமும் அறிவும் இயக்குவனவாம். -

உடலை இயக்குமாறு உயிரைத் துண்டுவன உளமும் அறிவுமாம் என்றவாறு.

உளமாவது உணர்வுநிலையே என்பது அறியப்படும்.

உளமும் அறிவும்தாமே ஒன்றனைஒன்று இயக்கி-உளமும் அறிவும் தமக்குள் ஒன்றனைப் பிறிதொன்று ஆளுமைபுரிந்து உணர்வு மேலோங்குங்கால் அது அறிவை யடக்கியும், அறிவு மேலோங்குங்கால் உணர்வை அடக்கியும் ஒன்றனைப் பிறிதொன்று ஆளுமை புரிந்து என்றவாறு.

தம்மொடு பொருந்திய எல்லாப் பொருளையும் அவ் உளமும் அறிவும்

தம்மால் உணரப்படுவனவும் அறியப்படுவனவுமான அனைத்துப் பொருள்களையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/440&oldid=1223937" இலிருந்து மீள்விக்கப்பட்டது