பக்கம்:நூறாசிரியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'பாவலரேறு பெருஞ்சித்திரனார்

19

புறநானூற்றுப் பாடலடியும் ஊர்க்கும் வாழுநருக்கும் தொடர்பு காட்டி நின்றது.

இனி, ஊர் கூற வேண்டியவன் வாளா ஊரின் பெயரை மட்டும் உரையாது அவ்வூரின்கண் விளங்கும் சிறப்பான ஒரு நிகழ்ச்சியும் கூறித் தன் ஊரின் தன்மையை நன்கு விளக்குதல், கேட்பார் மனம் பொருந்திக் கேட்டல் வேண்டும் எனற்கு

பெண் புறா அடைகிடந்து உயிர்த்தல் தொழில் செய்தலையும், ஆண் புறா அதன் துணைக்கு ஊர்ப்புறத்தே போய் வளைந்து பருத்த பசுங்கதிரைக் கொய்து வந்து மகிழ்ச்சியுடன் அதன் வாய்க்கு ஊட்டுதலையும் கூறித் தம் ஊரின்கண் வாழும் மக்கள் அன்புடையராக இருப்பர் என்பதைத் தலைவிக்குக் குறிப்பால் உணர்த்திக் காட்டினான் என்க.

ஐயறிவு படைத்த பறவையினங்களும் அன்பு நிறைந்த இல்லறம் செய்து வாழும் தன் ஊரின்கண், ஆறறிவு படைத்த மக்கள் தம்மின் அன்பு நிறை வாழ்க்கைக்கு அளவும் வேண்டுவதோ என்று தலைவன் கூறித் தான் வாழும் ஊர் மக்களின் நல்லன்பையும், அதன் வழித் தான் கொண்ட மெய்யன்பையும் தலைவிக்கு உணர்த்தினான் என்க.

இனி, அன்புநிறைந்த மக்கள் வாழும் நகராக இருப்பதுடன் அதனைச் சுற்றி வளம் நிறைந்த வயல்களும் மலிந்து கிடப்பதையும், அதன் வழித் தன் ஊர் வாழ்க்கை வளத்திற்கு ஏற்ற ஊரே என்பதையும் உணர்த்த, அதன் புறத்தே புடைத்து வளர்ந்த பசுமையான கதிர் நிரம்பிக் கிடத்தலைத் தலைவிக்குக் கூறினான்.

கொய்து வருதல் இயல்பும், கொய்து உவந்து ஊட்டுதல் சிறப்புமாம். இல்லற ஒழுக்கத்தைப் புறவினமும் கடைப்பிடித்து வாழும் மாடங்கள் நிறைந்த கூடல் நகரம் என்பது தலைவன் குறிப்பு.

புறவினம் குனுகு இறை மாடக் கூடல் என்றது. புறவினம் குனுகுதல் ஒலி நிறைக்கும் இறைவன் திருமன்று நிறைந்த கூடல் நகரம் எனல் வேண்டி புறவினம் குனுகுகின்ற ஒலி, ஊர் மக்கள் மகிழ்வால் ஆரவாரிக்கும் குறிப்பை உணர்த்திற்று.

இனி, ஊர் கேட்ட அளவிலேயே, தலைவியோடு தான் கூடிவாழ்வதற்கு ஏற்ற நிமித்தக் கூற்றாக, அவன் வாழும் நகரைக் கூடல் என்பான் வெறுங் கூடல் என்னாது, மாடக் கூடல் என்றது, தான் தலைவியின்பால் கொண்டது பெருமை பொருந்திய காதல் ஆகும் எனல் வேண்டி இனி, வெறும் மாடக் கூடல் என்னாது இறை மாடக் கூடல் என்றது, இறையவன் கோயில் நெடிது நிற்கும் ஊரின்கண் வாழ்தல் செய்யும் தன் காதலின் உண்மையைக் குறிப்பால் உணர்த்துவான் வேண்டி இறைவன் வாழும் ஊரினின்று வரும் யான் பொய் வழங்கேன் நின்னொடு கூடி இல்லறம் நடத்தும் உறுதிப்பாடு உடையேன் எனக் குறிப்பால் உணர்த்தினான் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/45&oldid=1221630" இலிருந்து மீள்விக்கப்பட்டது