பக்கம்:நூறாசிரியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

25


ஓடி என வராது உவந்து புன்றலை புதைக்கும் என்றது, கண்ட அளவிலேயே உவந்து, உவந்த அளவிலேயே ஓடிப் புன்றலை புதைத்தது எனும் விரைவுபற்றி கண்டவுடன் மகிழ்ச்சியும் மகிழ்ந்தவுடன் ஓடி மடியில் தலை புதைத்ததும் நேர்ந்ததென்க.

புன்றலை - இளந்தலை - சிறியதலை
பெருமடி, புதைக்கும் பெற்றிதே - தாயின் பெருமை பொருந்திய மடியுள் தன் தலையைப் புதைத்துக் கொண்டு ஆறுதலுறும் தன்மையது.

ஒரு குழவிக்குத் தன் தாயின் மடியே பெருமை பொருந்திய மடி போல், பருவமுற்ற தலைவிக்குத் தன் தலைவனின் மடியே பெருமை பொருந்திய மடியாம் என்றவாறு.

தோழி - விளி. தோழி, நீ கேட்பாயாக.

தோழி இன்னும் தன்னைப்போல் ஒரு தலைவனைப் பெற்றிலள் ஆகையினால், அவளுக்குத் தான் தன் தலைவன்பாற் கொண்ட ஈடுபாட்டினை உணர்த்துவாள், முதலில் குழந்தை தன் தாயின்பால் கொண்ட ஈடுபாட்டினைக் கூறினாள் என்க. அண்மைத் தாயினும் சேய்மைத் தாயினும் - இடமும், காலமும் உணர்த்தக் கூறினாள். இடத்தான், அருகில் உள்ளான் எனினும் தொலைவில் உள்ளான் எனினும் என்றும், காலத்தான், இனி அடுத்து வரும் காலத்தே மனப்பான் எனினும், அன்றிப் பின்னொரு காலத்தே மனப்பான் எனினும்- என்றும் கொள்க. இடத்தான் சேய்மையோன் எனின், தான் அவனை நாடிப் போதலே முறையென்றும், காலத்தால் சேய்மையோன் எனின், தான் அவன் மணக்கும் வரை காத்திருத்தலேமுறையென்றும் அறங் கூறினாள் என்றபடி அறம்-ஒழுகலாறு

பெண்மைக் கொன்றிய நெஞ்சம் நாடி - தன் பெண்மை உளத்திற்குப் பொருந்திய நெஞ்சத்தை நாடி இக்கூற்றான்தான் முன்பே தன்தலைவனைக் கண்டு அவன் நெஞ்சுறக் கலந்த நிமித்தங் கூறினாள் என்க.

தேங்குவது இயல்பின் தேரார் - பெண்மை நெஞ்சம் தனக்கொன்றிய ஆண்மை உள்ளத்தைத் தேடித் தேங்கி அமைதியுறுவதே இயற்கை யாதலின், அதனை அறியாதவர் என்றும், தமக்குற்ற இயல்பினால் பட்டறிவினால் தன் மகளின் உள்ளத்தைத் தேர்ந்து கொள்ளாதவர் என்றும் பொருள் கொள்க தமக்குற்ற அறிவாலும், நிகழ்ச்சியாலும் மன அறிவாலும், தன் உள்ளத்தைத் தேராதவர் தனக்கு மணவினை தேர்ந்தனரே என்று இழிவுதோன்றக் கூறினள் என்றபடி

யாங்குகொல் முயல்வது- தன் உள்ளத்தைத் தமக்குற்ற மனவியலால் தேர்ந்து உணராதவர், இம்மண வினைக்கு ஒருப்படாத என்னை முனிந்து கொள்வது எதற்கு என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/51&oldid=1189507" இலிருந்து மீள்விக்கப்பட்டது