பக்கம்:நூறாசிரியம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நூறாசிரியம்

ஐம்பொறிகளால் தனித்தனி அறியும் ஐம்புலன் உணர்வு. உள்ள உணர்வு - இவ்வைம்புலன் உணர்வும் முதிர்ந்து ஒன்று கூடிய விடத்துத் தோன்றும் மெய்யுணர்வு. ஐந்தும் ஒரே காலத்து, ஒரே அளவின், ஒரே படித்தாய்ப் பொருந்தாவாகலின் அவை மாறி மாறியும், குறைந்தும் கூடியும் பொருந்தும் தன்மை நோக்கி உள்ள உணர்வும் வேறுபட்டு விளங்கும் என்க. இவ் வைம்புலனறிவும் நிலத்தானும், மொழியானும், ஆளுமையாலும் தொடக்கத்தே வேறுபட்டு நிற்பினும், முடிவே இவ்வுலகத்துள்ள எல்லா உயிர்கட்கும் ஒன்றுபட்டு உள்வாங்கும் தன்மையது. நம் வாயால் இட்ட ஒலி, நம் காதால் கதுவப் படுதல் போல், ஒரு பொறியால் எறியப்பட்ட உணர்வு இன்னொரு பொறியால் அறியப்படுதல் நிகழும். அதுபோலவே ஐம்புலனறிவும் ஒன்றுபட்டு உள்ளவுணர்வால் உள்வாங்கப்படும். அக்கால் உள்ளம் நுண்மை எய்தும். அந்நுண்மை சுரக்கச் சுரக்கப் புலன் உணர்வு வறக்கும். புலனுணர்வு வறளவே பொறி செத்துக் காயும். அதன்பின் எதிரேறிப் பாய்ந்த உணர்வெல்லாம் உளவூற்றினின்று பொறி புலன்கள் வழி எதிரிறங்கிச் சாயும் . அக்கால் பொறிகள் வழிக் கொள்ளப்படும் அறிவு ஒன்றுமில்லை. தள்ளப்படும் அறிவே மிகுதி என்க.

கையிறைவையுள் (Boring Pump) தொடக்கத்து ஊற்றப்படும் நீர், உள்நீர் மேலேறி வரத் துணை நிற்றலும், பின் ஊற்று நீர் தொடர்ந்து இறைவை வழி வெளியேறுதலும் போல்வன பொறிகள் உள்வாங்கிய புலனுணர்வும் (தொடக்கத்து ஊற்றும் நீர்) பின் அவை வழி, உள்ளம் வெளியேற்றும் மெய்யுணர்வும் (பின்வரும் ஊற்று நீர்) என்றறிக.

முதற்கண் புலனறிவு மிகுத்தே உள்ளவுணர்வு மிகுமாகலின் புலனும் உள்ளமும் எனலாயிற்று.

பூணுதல் - பூட்டப் பெறுதல்

(பூணப்பெறுதல் பூணும், அணியப் பெறுதல் அணியும் ஆகும்.அணிதல் அடிக்கடி கழற்றப் பெறுமாறு ஒன்றை உறுப்பிற் கொளுவித்தல், பூணுதல் என்றும் கழற்றப் பெறாவாறு ஒன்றை உறுப்பிற் கொளுவித்தல்,

ஆடை, வளை, முடி, மாலை, குப்பாயம், காலுறை முதலியன அணிவிப்பன.

கடகம், தோடு, மங்கல நாண், மணம், புகழ் முதலியன பூணுவன.

'மங்கல நாண் அணிதல்' எனல் பிழையான வழக்கு

'மங்கல நாண் பூணுதல்' என்பதே தமிழ்ப் பண்பு வழக்கு: அது கழற்றுதற்குரியதல்லதாகலின்)

புலனும் உளமும் பூண்டார். புலனறிவும், உள்ள உணர்வும் நிலை நிற்கப் பெற்றார்.

நிலத்து உயிர்க்கு நிலத்தின்கண் வெளிப்போந்த உயிர் யாவினுக்கும். மாந்தர்க்குமட்டுமின்றி, விலங்குகளுக்கும் சான்றோரே வழிகாட்டியா கலின்.