34
நூறாசிரியம்
உரமேறி நிற்கவும், மெலிந்து நின்ற சிறிய மார்பு அழகுபெற, வலிவுபெற்று நிற்பவும், குரல் தடிப்பவும், முகவாயினும் தாடையினும் அடர்ந்த மீசையும் தாடியும் தாவி நிற்பவும், தலைமயிர் அடர்ந்து வளர்ந்து கழுத்தை அளாவி நிற்பவும், உடல்கட்டு மிகுநது வளர்ச்சியுற்று நிற்கவும் செய்தானுக்குப், பருத்து விம்மி இணைந்து நின்ற முலைகளும், குறுகி யொடுங்கிய இடையும், அகன்ற இடைக்கீழ்க் கடிதடமும், வெள்ளிய எயிறும், மூங்கில் போன்ற தோள்களும் கொண்டாள் ஒருத்தியை, முன்னைய ஒரு நாள் மனங்கொண்டு, தனி மனையில் வதியும்படி வைக்க, எஞ்சிறு மகனாகிய அவன் தானும் பெற்றுத் தந்த பெருமை பொருந்திய தன் மகனை உதோ, இவண் காண்! தனக்குற்ற திறமை நிறையும்படி இவன் அவ்வாற்றலைத் தேடிக் கொண்டது யாங்ஙன்?
விரிப்பு :
இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.
தன் மகனின் குழவிப் பருவத்தையும், அவன் விரைந்து வளர்ந்து இளைஞனாகி மணம் புரிந்து ஈண்டொரு மகனுக்குத் தந்தையாகி நின்ற காலத்தையும் கண்ட தாய் ஒருத்தி, அவன் இத்திறம் பெற்றது எங்ஙனோ என வியந்து கூறியதாக அமைந்ததிப் பாட்டு.
இவனை விரைந்து இம்மாற்றத்திற்குரியனாக்கிய காலம் எத்துணை வலிமையுடையது எனக் கூறுவான் வேண்டி, வலிதே காலம் என்றாள். வலிது-வன்மையுடையது. குழவியை இளவோனாகவும், இளவோனை முதுவோனாகவும், முதுவோனை மூப்போனாகவும் செய்கின்ற ஆற்றல் பொருந்தியது காலம், இனிக், குழவியைக் குமரனாக்கி , ஒரு குழவிக்கும் தந்தையாக்கிய காலம், தன்னையும் கிழவியாக்கியதைத் தாய் தன் மகன். வழிக் காண்பாளாயினாள். எனினும் 'தன்கண் என்றும் தனக்கின்மை'என்றபடி, தன் மாற்றத்தை வியவாது தன் மகனின் மாற்றத்தைக் கண்டு வியந்தாள் என்க.
வியப்பல் யாமே என்றது, தன் கணவனையும் உள்ளடக்கிய கூற்று. கணவனினும் தானே அவனை ஊட்டியும் தூக்கியும், உடுத்தும், உறங்குவித்தும், பல்வகையிற் சீர் ஆட்டியும், அணுகியும் மகனைக் கண்டவளாகையால், தாய் தன் மகன் வளர்ச்சியைக் காலம் செய்த மாற்றம் என்றும், அது வியத்தற்குரியது என்றும் கூறுவதற்கு மிகவும் உரிமையோளானாள்.
இனி, தன் மகன் குழவிப் பருவத்திலிருந்து மணம் செய்விக்கும் வரை, தாய் அவனிடத்துப் பல்வகை மாற்றங்களையும் படிப்படியாகக் கண்டாளேனும், அம்மாற்றங்கள் யாவும் அவனை அவளுக்கு இளவோனாகவே காட்டியமையால், அவள் அக்காலத்தை அன்றன்று வியவாமல், ஈண்டு அவன் பிறிதோர் உயிரைப் படைத்தற்குரிய திறம்பெற்ற