பக்கம்:நூறாசிரியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

45

அவ்விளையோன், இதனுடைப் பின்னலைப் பற்றி வலித்துத் தலை தாழ்க்க, இது மிகச்சினந்து அவன் தலைமயிரைப் பற்றி வருத்த, அவன் வலிமேலிட்டு 'அம்மே' என அழைக்க, அவன்றாய் அவ்விடத்துப் போந்து இதனைக் கையால் அலைத்தல் செய்ய, ஈது ‘அப்பே’ எனக் கதற, யான் அலறிப்புடைத்து ஆங்கு ஓடி, அவன்றாயோடு வெப்பமான உரைகளை மாறி உரைத்து, இதனைப் பற்றியிழுத்து வீடு கொணர்ந்து கிடத்திப் பணி மேற்கொண்டு நான் புறக்கணிப்பாய் இருக்க, கால்குடையா நிற்கும் இச்சிறுக்கி மீண்டும் யானறியாவாறு தெருவில் இறங்கி, அப் பீறல் உடுத்த பையலை விளித்து அவனொடு நாள் முழுதும் நீளும்படி கரைதல் செய்தொழுகும் கட்டுரை முற்றும் நின்பால் உரைத்துக் காட்டுதற்குப் போதுவதாகாதது என் ஒரு சிறிய நாவே !

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவன் பொருள்வயிற் பிரிவதை ஆற்றாத தலைவி, அவன் பிரிவிடைக் காலத்து, தன் சிறிய மகளின் அடக்கலாகாக் குறும்புச் செயல்களையும், அவற்றால் தான் படுந்துயரமும் கூறி, அக்காலத்து எவ்வாறு ஆற்றி இருப்பேன் என்று கவன்று கூறியதாக அமைந்ததிப் பாடல்.

தலைவன் பிரிவால் தன் ஆற்றாமையை வெளிப்படக் கூறாது, தன் சிறு மகள்மேல் ஏற்றிக்கூறி, அவன் பிரிவைத் தவிர்க்க வேண்டினள் என்றபடி.

தலைவி, தன் குறும்பு மகளால் படுதல் தன் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதொன்றே எனினும், அதனைத் தான் படுத்துயரே போல் இட்டுக் காட்டுதல் ஏனெனின், தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்த வேண்டியே என்க. இனித் தன்னையும் தன் குழவியையும் பிரிந்து செல்ல விரும்புவானுக்குத் தன் மகளின் பிள்ளைக் குறும்பை நினைவூட்டிக் கூறுதல், மீதுற்றக் குழந்தையின் நினைவால் அவன் உள்ளம் பேதுற்றுப் பிரிவுக்கஞ்சும் என அவள் கருதினமையும் ஆகும். இனி, குழந்தையின் குறும்புத்தனத்தால் தான்படும் துயர் அவனுக்குத் தன்மேல் கழிவிரக்கம் ஏற்படவழிவகுக்குமேல், அதனாலும் அவன் செலவு தடைப்படல் நேரும் என்று அவள் கருதினாள் எனினும் பொருந்துவதாகும் என்க.

பிரியத்தலைப்பட்ட தலைவன் தன் போக்கை அவள் விரும்பவில்லை என்பதை முதற்கண் அவனுக்கு உணர்த்த விரும்பியவள் 'யாங்கு யான் ஆற்றுவன் ஜயே! என்றாள். ‘ஐ’ என்றது தலைவனை, "ஐ" தலைவன், ‘ஏ’ விளி, இரங்கக் கூறியது.

ஆற்றுதல் - பொறுத்தல்.

யாங்கு யான் ஆற்றுவன் என்பதால் ஆற்றுதற்கியலேன் என்று உணர்த்தினாள் என்க. தலைவனிடம் எதிர்மறையாக ஆற்றியிரேன் எனக்கடுத்துக் கூறுதல் மனையுறை மகளிர்க்கொத்த தன்றாகலின், எங்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/71&oldid=1221647" இலிருந்து மீள்விக்கப்பட்டது