பக்கம்:நூறாசிரியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

53


நல்ல கணவனைப் பெறல் வேண்டி முற்பருவத்தே பாவையர் இளமை நலம் தவிர்த்து மனத்துக்கண் மாசிலராகி எண்ணிய எண்ணியாங்கு எய்த ஆற்றியிருத்தல்.

தான் விரும்பி ஒன்று கூற, அது தன் விருப்பம் அன்றேனும் தன் விருப்பத்தினையே மேலெனக் கொண்டு, அதனையே செயற்படுத்தத் தன் தலைவன் விரும்பிய அச்செயலை, தலைவி அது தன்பால் கொண்ட அருள்நோக்கு என்று கண்டு, அத்தகைய அருஞ்செயலை அவன் தன் பொருட்டு இரங்கிச் செய்யுமாறும், அத்தகு செயல் புரிதற்கு ஆகிய பெருந்தகைமை பெற்ற அத்தலைவனைத் தான் கணவனாகப் பெற்றதற்கும் எத்துணையளவு நோன்பு பெற்றிருத்தல் வேண்டும் என்று கூறி வியந்தனள் என்க. என்னை? தான் செய்த தவத்தின் அளவு, அது பயன் கொடுக்கும் பொழுதிலன்றி அறியப் பெறாதாகையால், அதன் அளவும் பெருமையும் ஈண்டு அவனால் அறியப் பெற்றாளாகலின், தான் எத்துணையளவு நோன்பு நோற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதன் பயனாகத் தான் எத்துணையளவு தகைமை பெற்ற தலைவனை அடையப் பெற்றாள் என வியந்து கூறினாள் என்பதுமாம்.

இது புறப் பொதுவியல் என் திணையும், கற்பு முல்லை என் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/79&oldid=1221658" இலிருந்து மீள்விக்கப்பட்டது