பக்கம்:நூறாசிரியம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவற்றின் ஈடுபாடுடைய பிறர் வாயிலாக இவ்விலக்கியத்தின் சுவை நலன்களையும் கருத்து வளங்களையும் கேட்டுணர்வார்களாயின், பின்னர் அவர்களும் தாமே இவைபோலும் இலக்கியங்களைப் படிக்க அவாவி நிற்பார்கள் என்பது உண்மை.

இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளைப் போன்றவை!

பொருள் நசையும் உலகியல் நாட்டமும் உடைய புல்லிய அறிவுடையவர்கள், இயற்கையின் அழகையும் அமைதியையும் உணர முடியாதது போலவே, இலக்கிய நயங்களையும் உணர்ந்து சுவைக்க இயலாது. அவர்கள் போன்றவர்களுக்கு இப் பாடல்கள் ஒரு கால் தேவை இல்லாமல் போகலாம்!

ஆனால், அத்தகையவர்களும் இப் பாடல் வரிசையுள் உள்ள ஒரு பாடலை மட்டும், பிறர் வழியாகச் சுவைத்துப் பார்ப்பார்களாயின், கட்டாயம். அவர்களையும் இப் பாடல்கள் ஈர்த்துத் தம்முள் அடக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்விரண்டாம் பதிப்பை முன்னாள் தென்மொழி அமைச்சரும், உறைத்த தென்மொழித் தொண்டரும் எமக்குப் பல்லாற்றானும் துணை நின்று நலம் பயக்கும், தூய மெய்த்தமிழ் அன்பரும், ஆகிய திரு. அழ.இளமுருகன் தம் அச்சகத்திலேயே அச்சிட்டு உதவியுள்ளார்.

அவர்க்கு எம் வாழ்த்தும் நன்றியும் உரியவாகுக.

நளி, 8. திபி. 2017 (24.11.86)

இரண்டாம் பகுதிச் சிறப்பு முன்னுரை

நூறாசிரியம் - இரண்டாம்பகுதி எனும் இந்நூல் இரண்டாம் பத்துப் பாட்டுகளையும் உரைகளையும் கொண்டது.

இது, கோவை, பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெறுகிறது.

நம் நூல்கள் காலத்தால் வெளிவர வேண்டும் என்பதும், அவற்றால் தமிழின மக்கள் பயன்பெற வேண்டும் என்பதும், நூல் வெளியிட்டுக் குழுவினரின் கொள்கை, வாணிக நோக்கமும், மிகுந்த ஊதியக் கொள்ளையடிப்பும் அவர்களின் மன விருப்பமாக இருத்தல் இயலாது. ஏனெனில், நம் நூல்கள் அவற்றிற்கு நேர்மாறான விளைவுகளையே அவர்களுக்கு உண்டாக்கித் தருவன.

எனவே, உண்மைத் தமிழ்த் தொண்டும். நேர்மையான முன்னேற்றமுமே கருதி, பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டுக் குழு, இது போலும் நூல்களை வெளியிட உறுதி கொண்டிருத்தல் வேண்டும்.