பக்கம்:நூறாசிரியம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

55

இன்னும குவிந்து போகவில்லை; முன் நாளைய பெருமையுள் முழுகி எழுந்த பேருணர்வினால் தமிழன்னைக்குப் புகழ்மாலை சூட்டியும், தீயின் ஒளி நாக்குகள் போலும் எழுத்துக்களினால் பாட்டில் சுடர் கொளுத்தியும், அரசோச்சி நின்ற நின் பெரிய கைகளின் வீச்சும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உயிர்களின் உணர்வு மிகும்படிப் பாடல்களை மழையெனப் பொழிந்து உயரிய வாழ்க்கை என்னும் பயிர் செழித்துப் புடை நிரம்பும்படி நீ பாடியிருந்தனையே!

இனியே, சிவந்த இதழ்கள் நிறைந்த தாமரையின் தேன் துளிகளைக் கவர்ந்து அருந்திய உவப்பின் மேலீட்டால் முரலுதல் செய்யும் கரிய வண்டைப் போல், இயற்கையூடு ஒன்றிப்படியும் புலவர் எனப்படுவோரும் இனி இலராக,மக்களின் அறிவு மயக்கம் அகற்றுகின்ற மறவர் எனப்படுவோரும் இனி இலராக; இருள் மண்டி உறக்கம் கொண்டிருந்த தமிழ் நிலம் விழித்து எழும்படி, அருள் மழை பொழியும் அறம் பூண்ட நெஞ்சும் மடிந்துற்றதாக தயிரை அலப்பிக் கடைகின்ற மத்துப் போலும், தமிழரின் உயிரைக் கடைந் தெடுக்கின்ற நின்னுடைய பெரும் பிரிவினால் உள்ளமும் அறிவும் ஓய்தல் நின்ற கள்ளமற்ற உணர்வினார் கனிந்துநிற்போர் தமக்கு,

எவர் இனித் துணையாவரோ? இறப்பெனும் கள்வனால் கவர்ந்து கொள்ளப் பெற்றனையே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம் மறைந்த ஞான்றை உள்ளக் கவற்சி மீதுரப் பாடிய கையறு நிலைப் பாடல் இது.

பாவேந்தரின் பெருமிதமான போக்கும், தமிழுக்கென ஓங்கிநின்ற குரலும்; தமிழ்ப் பகைவர் அஞ்சிப் புறம்நடுங்கும் நோக்கும், பேரரசன் எனப் பெருமிதங் கொண்டு ஓச்சிய கைவீச்சும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும் பயனும் இன்னும் தமிழர்களின் நெஞ்சங்களில் காட்சியாகி நிற்கும் நிலையினைக் காட்டி அவர் பெரும் பிரிவால் தமிழர் இழந்த இழப்பையும், அவலத்தையும் தொகுத்துக் கூறியதாகும் இப்பாடல்.

எவர்கொல் துணையே... - என்னும் முதலடியினை இறுதியடிக்கு முடிவாகக் கொள்க.

எவர் துனை - என்றமையால் இனித் துணை எவருமிலர் என்றபடி

கவர்பு உற்றனை - கவர்ந்து கொள்ளப் பெற்றனை. பிறர் விரும்பும் ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாகப் பிரித்ததான், கவர்தல் எனக் கூற வேண்டுவதாயிற்று.