பக்கம்:நூறாசிரியம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

61

பட்டமையாலும் அவர் வழக்கே நிலைத்தது குறித்து, தமிழர்க்கு வானிய லறிவே குறைவென மொழிவர் மதிக்குறைவினார் சிலர். அவர் தருக்குரைகள் கதிர்முன் பனி போல் உருக்குலைந்து போங்காலம் மிகத் தொலைவில் இல்லையென உணர்க.

இனி, ஒவ்வோர் ஓரைப் பெயராலும் அழைக்க பெற்ற மாதப் பெயர்கள் சைத்திரம், வைசாகம், ஆஹரம் (ஆணி) ஆஷாடம் (ஆடி) முதலியன. இவ் வழக்கு, தமிழரின் ஓரைப் பெயர் வழக்கை அடியொட்டின. (விரிவைக் கணிய நூலிற் கண்டு கொள்க)

இனி, தலைமை மீனின் பெயரே அந்த மீன் சார்ந்த கூட்டத்திற்கும் வழங்கப்பெற்றது. வெள்ளாடு போல் அமைந்த மீன் கூட்டத்திற்கு மேஷம் என்றும். ஆணும் பெண்ணும் இணைந்த இரட்டைத் (மிதுனம்) தோற்றம் போல் உள்ளதற்கு மிதுனம் என்றும், நண்டு, மடங்கல்(சிங்கம்), கன்னி, துலை(தராசு), நளி(தேள்) சிலை(வில்), சுறவம் (முதலை) கும்பம் (குடம்), மீன் ஆகியன போல் அமைந்தவற்றிற்கு முறையே கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம் (தேள்), தனுசு (வில்) மகரம்(முதலை), கும்பம், மீனம் என்றும் வழங்கினர். இவ்வழக்கில் கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்பன தூய தனித் தமிழ்ச் சொற்கள். இவ்வாரிய வழக்கு தலையெடுத்தபின் ஓரைப் பெயரால் மாதங்களைக் குறிக்கும் தமிழ் வழக்கு தலை மறைக்கப் பெற்றது.

இனி, சித்திரை, வைகாசி என்று தொடரும் வட நூல் வழக்கிற்கான, தூய தமிழ்ப் பெயர் வழக்கு மேழம், விடை இரட்டை அல்லது ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலாம், நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்பன.

எனவே சுறவத் திங்கள் இக்கால் ஆரிய வழக்குப் பெயரான தை மாதத்தைக் குறிக்கும் தூய தனித் தமிழ்ச் சொல்லும் வழக்குமெனக் கொள்க.

மாணிழை: பெருமைக்குரிய அணி, இழைக்கப் பெறுவதால் அணி இழையெனப்பட்டது. இழைத்தல்-ஆராய்தல், கலப்பித்தல். சீவல், பொடியாக்குதல், செதுக்குதல், செய்தல், அழுத்துதல், மணி பதித்தல் ஆகிய பொன்செய்வினைகள் அத்தனையும் குறிக்குமோர் அருஞ்சொல். இத்தனை வினைப்பாடுகளும் கொள்ளலால் பொன்னால் செய்யப் பெறும் அணிக்கு இழையென்று பெயர் வந்தது. இழை அணிவோரை யன்றி அதனைச் செய்வோரை வளையோர் என்று குறிக்காமை போல.

இனி, செய்யப்பெறும் அல்லது அணியப் பெறும் அணிகளுள் தாலி ஒன்றே மங்கலச் சிறப்பு வாய்ந்ததாகலின் அது மாணிழை எனப் பெறும் தகுதி வாய்ந்தது. மணக்கப் பெற்ற காலத்து அணியப் பெற்ற தாகலின் மணந்த மாணிழை எனப்பெற்றது.

அணந்த சுறவுமுன் அகறல் ஆகின்றே -நெருங்கி வரும் சுறவத் திங்களுக்கு முன் அகலுதல் ஆகிற்று.