பக்கம்:நூறாசிரியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்களின் உறுதிக்கும், துணிவிற்கும் என்றும் நம் நன்றியும் வாழ்த்தும் அவர்களுக்கு உண்டு.

அவர்கள் முயற்சி வெல்க.

தமிழினம் அவர்கள் முயற்சிக்குத் தோள்தந்து துணை நிற்குமாக!

மேழம் 19, தி.பி. 2012 (1-4-81)

நூறாசிரியத்தின் பாடல்கள் யாவும் செறிவாக அமைந்திருத்தலின் அவை தெளிவான பொருள் விளக்கத்துடன் வெளிவர வேண்டும் என்னும் நோக்கொடு ஐயா அவர்கள் தென் மொழியில் இடையிடையே வெளியிட்டு வந்தார்கள். அவ்வாறு வெளிவந்தன அறுபத்தாறு பாடல்கள் ஆகும்.

அவ்வாறு உரையுடன் வெளிவந்த அறுபத்தாறு பாடல்கள் போக ஏனைய பாடல்கள் உரையெழுதப் படாமலே இருந்தன. அம் முப்பத்து நான்கு பாடல்களுக்கும் திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள், ஐயா அவர்களின் நோக்கிலும் போக்கிலுமாக உரை. எழுதி நிறைவுபடுத்தியிருக்கிறார்கள். ஐயா அவர்களின் இந் நூறாசிரியப் பாக்களுக்கு அறிவியல் அறிவொடு, வாழ்வியல் நுண்மாண் நுழைபுலம் சான்ற, தமிழ்ப் புலமையிலும் வல்லாரே உரையெழுதவியலும். இத் தகுதிகளுக்குரிய புலவர் இறைக்குருவனார் இக்குறுகிய காலத்து வலிய பணியை எடுத்துக் கொண்டு, அதைச் செவ்வனே செய்துள்ளார்.

இந்நூறு பாடல்களுக்குமேல் இத்துடன் இணைந்துள்ள 24 பாடல்கள் பின்னிணைப்பாக இந்நூலிலேயே அமைந்துள்ளன. அவை காலத்தால் உரையுடன் பின்பு வெளியிடப்பெறும்.

இந்நூலை, ஐயா அவர்களின் மறைவிற்குப் பிறகு முதல் நூலாகத் 'தென்மொழி நூல் வெளியீட்டு விற்பனையகம்' வெளிக் கொணர்ந்துள்ளது.

இந்நூலைப் பதிப்பித்து வெளிக்கொணர்தற்கு இதன், வடிவமைப்பு, அச்சீடு, பிழைதிருத்தம் முதலான பல்வேறு பணிகளில் திருவாளர்கள் மா.பூங்குன்றன், பாவலர் முல்லைவாணன், கி. குணத்தொகையன், மா.பொழிலன், திருவாட்டி குணவழகி, திரு. ஈகவரசன், வேங்கடேசன், இளங்கோவன் ஆகியோர் மனம் ஒன்றி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூற்பயன் கொண்டு சிறக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்.

தென்மொழி நூல் வெளியீட்டகத்தினர்

''

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/9&oldid=1210008" இலிருந்து மீள்விக்கப்பட்டது