பக்கம்:நூறாசிரியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நூறாசிரியம்


போனது, அறம் கூனலுற்றது. பொருள் அரசு செய்து ஆணை புரிதலால் மறம் தலை நிமிர்ந்தது, மானம் தன் நிலையினின்று இழிந்தது; ஆனும் பெண்ணும் கூடித் தலைப்பெய்தும் மனவமைப்பின்கண் பெருமை இலவாகியது; கணவனும் மனைவியுமாகப் பொருந்தியவர்தம் பிணைப்பு தளர்வுறலாயிற்று, பூதவியல்,வேதியியல், முதலிய அறியப் பெற்ற சிதைவிலா உண்மைகள் யாவும், சிதைவுறும் மாந்த உடலின் காலடி நின்று இழிதலாயின; மாந்தன் தானே சமைத்துக் கொண்ட பொறி வினைப்பாடுகள் யாவும் இவன்றன் உடலிலுள்ள பொறி புலன்களை அரிந்தெடுத்து விலக்கலாயின. காட்டின்கண் தோன்றி மறையும் விலங்கினங்கள் தம் ஊன் பொதி உடம்புகளை வளர்த்துக் கொள்ளவே முனைந்து முயல்வன போல், மாட்சிமை பெறும் மாந்தரின் மீமிசை வாழ்வும் அவ்வூன் முயற்சி ஒன்றே கொண்டு இயங்குதலாயிற்று - என்றிவ்வாறு தேர்ந்து கொள்ளப் பெறாத வாழ்க்கை மாறுபடுதலுறின், விலக்கமுடியா இருள் பொருந்திய அழிவு நிலை நோக்கி விரைதல் ஆகின்றது இவ்வுலகம்.

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

இவ்வுலகத்துக்கண் அறம் மயங்கி மறமோங்கி, பொருள். புரைந்து இருள் நிறைந்து, இன்பிழிந்து துன்பெழுந்து, மாந்தர் வாழ்வுறலின்றித் தாழ்வுறக் கிடக்குங் கீழ்நிலை நோக்கி, உலகியல் பொருண்முடிபு உணரக் கூறியதாகும் இப்பாட்டு,

புரையாகின்றே பொலிவுறு வாழ்வு - என்ற விடத்து, வாழ்க்கை பொலிவு மிக்கது என உறுத்துக் கூறியும், குறியதர் தப்பின்று குடும்பெனும் பயனே என்ற விடத்து வாழ்க்கைக் குறி தப்பிப் போகும் இவ்வுயிர்க் குழாம் மீளுமிடத்து நலம் பயக்குற விளங்கும்’ என்று எடுத்துக் கூறியும், கான்படு விலங்கின் ஊன் வளர்முனைவே மாண்றுெ மாந்தர்க்கு முயல்வாகின்று'என்றவிடத்து, நாடுபடு மாந்தரின் மீமிசைப் பேறு காடுபடு விலங்கின் ஊன் வாழ்விற் (கிழிந்த) முயல்வினின்று மீட்கப்பெறின் மாட்சிமைப் பட்டு விளங்கலுறும் என்று நிறுத்துக் கூறியும், இன்னும் பிறவழியும் உலகமுய்யக் கூறியதாகும் இப் பாட்டு.

விரைவு ஆகின்று உலகம் - உலகம் விரைந்து செல்லுதலை உடையது. இவ் வடியொடு பாட்டின் இறுதியடியாகிய ஆரா விருள்சேர் அழிநிலை நோக்கியே'என்ற அடியினைக் கொண்டு கூட்டிப் பொருள் முடிக்க உலகம் அழிவுநிலை நோக்கி விரைந்து செல்கின்றது. ஈண்டு'உலகம் ஆகுபெயராக உலகத்துள்ள எண்ணாயிரங் கோடி உயிர்களையும், அவற்றுள் மேம்பட்டு நிற்கும் மக்களையும், அவர் தம் பெருநிலை வாழ்வையும் குறித்தது என்க. ‘ஏ’ அசை, உறுதிப் பொருளில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/92&oldid=1181792" இலிருந்து மீள்விக்கப்பட்டது