பக்கம்:நூறாசிரியம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நூறாசிரியம்


15 வாணாட்டாயம்


நெஞ்சு நிலனாக நினைவு வித்தாக
ஐம்புலக் கொழுசார் அறிவு பகடாக
முயல்வுந் துணிவும் இணையே றாக
வைகலு முழுது, கற்ஸ்ரீர் பாய்ச்சி
ஒழுகுநாண் நட்புரன் ஏம மாக 5
ஐய,நீ பயந்த வாணாட் டாயத்து
வையம் உய்தல் வேண்டி அயர்வின்றி
மெய்யின் விளைபுகு வுணர்வேம்
செய்பயன் முற்றும் நின்னளி யன்றே!

பொழிப்பு:

எம் நெஞ்சம் நிலனாகவும், அந் நெஞ்சகத்தே ஊன்றப் பெறும் நினைவே வித்தாகவும், ஐம்புலன்கள் எனும் கொழுக்களால் சாரப் பெற்ற எம் அறிவு ஏராகவும், முயற்சி, துணிவு என்பனவே அவ்வறிவு ஏரின் பிணிக்கப் பெற்ற இணை ஏறுகள் ஆகவும் கொண்டு நாள்தொறும் உழுது, (அவ்வித்து வளரக் கல்வி என்னும் நீரைப் பாய்ச்சியும், ஒழுக்கம், நானம், நட்பு, உரன் என்னும் நாற்புடைக் காப்பிட்டும், தலைவனே, நீ நல்கிய இவ் வாழ்நாள் எனும் உரிமைக் காலத்து, இவ் வையகம் உய்யுமாறு விழைந்து, அயர்விலாது, மெய்மையின் விளைவு செயப் புகுந்த இவ்வுணர்வுடையேம் செயக்காணும் பயன்கள் முழுவதும் நின் அருட் கொடையே !

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

தூசகல் நெஞ்சோடு மாசறு காட்சியின் துலங்கத் தோன்றிய மெய்யறிவினார்க்கு இவ்வுலக இயக்கமாக அமைந்த வாழ்க்கை, வையம் உய்யுமாறு விழைதற்கும், அதன் பொருட்டு அயர்வின்றித் தம் பொறி புலன்களால் பயன் விளைத்தற்குமே என்பதை வலியுறுத்திக் கூறுவதாகும் இப்பாட்டு.

இப் பாடலின்கண் மெய்யறிவினார் செய்யும் அறிவு வேளாண்மை நன்கு விளக்கப் பெற்றது. நிலனுழுது பயன் விளைக்கும் உழவோர்க்கும், புலனுழுது பயன் விளைக்கும் புலவோர்க்கும் பொதுவாய விளைகளும் கருவிகளும் அமையக் கூறியது கருதற் பாலது.