பக்கம்:நூறாசிரியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

73


நெஞ்சம் நிலமாகவும், அதன்கண் ஊடாடும் நினைவு, அந்நிலத்தின்கண் விதைக்கப் பெறும் விதையாகவும், நெஞ்சத்தை உழும் அறிவு, நிலத்தை உழும் ஏராகவும், அவ்வறிவு முற் செலப் பயன்படும் ஐம்புலன் உணர்வுகளும், ஏருக்கமைந்த ஐந்து கொழு முனைகளாகவும், அறிவாகிய ஏர் உள்ளத்தை உழுதல் செய்யத் துணை செய்யும் முயற்சி, துணிவு இரண்டு இயல்பூக்கங்களும் ஏரை இழுத்துச் செல்லும் இரண்டு காளைகளாகவும், வாழ்வின் ஒவ்வொரு நாளுமே உழவு செய்யப்பெறும் பருவமாகவும், கல்வி முயற்சியே பயன் விளையப் பாய்ச்சப்பெறும் நீராகவும், ஒழுக்கம், நாணம், நட்பு, உரன் என்பவையே அந்நெஞ்ச நிலத்து விளையப் போகும் மெய்யறிவுப் பயிர்க்கு நாற்புறமும் காப்பாக அடைக்கப்பெற்ற வேலிகளாகவும் நமக்குற்ற வாழ்நாள் நாம் வேளாண்மை செய்தற்காக அளிக்கப்பெற்ற உரிமைப் பட்டயமாகவும், வையம் உய்தல் வேண்டி அயர்வின்றி மெய்யாக வேளாண்மை செய்து பயன் காணுவதே நமக்குற்ற கடன் என்றும், அதுவே நம் தலைவனாகிய இறைவன் நமக்கிட்ட கட்டளை என்றும் இப்பாட்டின் கண் உருவக வழி உணர்த்தப் பெற்றுள்ளது.

நெஞ்சம் - உள்ளகம்-உளம்-மனம், நில் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். பிறிதொரு பாட்டில் மனம் என்னும் சொல் மன்நிலைத்தல் என்னும் வேரடியாகப் பிறந்த சொல் என்று காட்டப் பெற்றது. உள்ளம் என்பது உள்-நினை என்னும் பொருளடியாகப் பிறந்த சொல் என்பதும் முன்னர் காட்டப்பெற்றது. ஈண்டு நெஞ்சம் என்பதும் நினைவு என்னும் பொருளை அடிநிலையாகக் கொண்டே தோன்றிய சொல்லாகும்.

நில்-நிள்-நிளைநினை-நினைவு.

நிள்-நெள்-நென்நென்சு-நெஞ்சு-நெஞ்சம் ‘சு பெயர்ச்சொல் இறுதி.

நினைவுக் கிடனாகிய பொருள் நெஞ்சம். இனி நெஞ்சம் உள்ளம் மனம் என்னும் முச்சொற்களும் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் இவை மூன்றும் மூன்று பயன் நோக்கி முச் சொற்களாக வெளிப்பெற்றன. புதிய கருத்துப் புலப்பாடோ, பயனோ இன்றிச் சொற்கள் பிறவா.

தமக்கு உள்ளமாக அமையப் பெற்ற அகக் கருவி மூன்று நுண்ணிய இயக்கங்களைக் கொண்டது.வல்லார் உள்ளத்து அலைகளாக வெளிப்படும் நினைவலைகளைத் தாங்கும் அல்லது வாங்கும் அலை வாங்கி ஆகவும், தன்னிடத்தே எழும்பும் நினைவை அலைகளாக வெளிப்படுத்தும் அலைபரப்பியாகவும், நினைவை வாங்கவோ, வெளிப்படுத்தவோ விழையாவாறு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் அடக்கியாகவும் மனம் மூவியக்கம் கொண்டது. இனி, இம்மனம் இம் முத்திறத்தும் அறிவுடன் சேர்ந்து உள் வாங்கப் பெற்ற அல்லது வெளியிடப் பெற்ற அல்லது நிலைநிறுத்தப் பெற்ற மன வலைகளின் சூடும் குளிர்ச்சியுமாகிய தன்மைகளைத் துய்க்கும் ஆற்றல் வாய்ந்தது. அறிவுடன் கலந்தாலல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/99&oldid=1181850" இலிருந்து மீள்விக்கப்பட்டது