பக்கம்:நூலக ஆட்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உறுப்பினர்ச் சீட்டு (Borrower's ticket) என்பது நூலக உறுப்பினர் தம் துணைப் பொருளாகும். நூலக விதிகள் ஒப்புக் கொள்கின்ற அவ்வளவு சீட்டுக்களையும் உறுப்பினருக்கு வழங்கலாம். பொதுவாக பொது நூலகங்கள் எல்லாவற்றிலும் இரண்டு சீட்டுக்களே ஓர் உறுப்பினர்க்கு வழங்கப்படுகின்றன. அதாவது ஓர் உறுப்பினர் ஒரே நேரத்தில் இரண்டு நூல்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். உறுப்பினர்ச் சீட்டுக்கள் மிக்க உறுதியும் கனமும் உள்ள ‘பிரிச்டல்’ (Bristol) அட்டையில் 2" X 1½" அளவில் செய்யப்பட வேண்டும். இச்சீட்டிலுள்ள பையுள் நூல் அட்டை எளிதில் செல்லும் வகையில் இச்சீட்டு இருத்தல் வேண்டும்.

உறுப்பினர்தம் சீட்டின் பின்புறத்தில் நூலகத்தின் சின்னமும் (Crest), சின்னத்திற்கு மேல் “இச்சீட்டாளரே இதனைப் பயன்படுத்தலாம்” என்ற மொழியும், சின்னத்தின் கீழ் நூலகத்தின் பெயரும் எழுதப்படல் வேண்டும். இச்சீட்டின் முன்புறத்தில் சீட்டின் வரிசை எண்ணும். உறுப்பினர்தம் பெயரும், உறுப்பினரின் தகப்பனார் பெயரும், உறுப்பினரின் முகவரியும் வரிசையாக ஐந்து வரிகளில் எழுதப்பெறல் வேண்டும்.

கீழ்க்காணும் வண்ணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்ச் சீட்டுக்களைப் பிரிக்கலாம்.

சிவப்பு - சிறுவர் உறுப்பினர்ச் சீட்டு.
மஞ்சள் - கதைகளுக்குரியது (Fiction Book).
பச்சை - பிற நூல்களுக்குரியது.

கதைகளுக்குரிய சீட்டுக்களுக்கு எக்காரணம் கொண்டும் பிற நூல்கள் தரலாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/55&oldid=1111788" இலிருந்து மீள்விக்கப்பட்டது