பக்கம்:நூலக ஆட்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எனது நோக்கம்

‘நூலகங்கள் பண்டை உலகின் சின்னங்கள்; இக்கால உலகின் புகழ்க் கொடிகள்’ என்பர் லாங்பெவல்லோ. சுருங்கக் கூறின் நூலகங்கள் பொது மக்களின் அறிவை வளரச்செய்யும் திருக்கோயில்களாகும். எனவேதான் இன்று நூலக இயக்கம் நம் நாட்டில் தொடங்கப் பெற்றுள்ளது. அதுவளர்ந்து நாட்டுக்கும் மொழிக்கும் நலம் பயக்க வேண்டுமாகில், நூலக வளர்ச்சி, நூலக அமைப்பு முதலியன பற்றி மக்கள் நன்கு தெரிந்தாக வேண்டும். இத்துறை பற்றிய நூல்கள் பலவும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளன. தமிழில் ஓரிரு நூல்கள் தான் உள்ளன. எனவே நூலகத் துறை பற்றிய நூல்கள் சில எழுத நான் முற்பட்டேன். எனது முதல் நூலாகிய நூல் நிலையம் நூலகத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரையில் முறையோடு கூறுகின்றது. இரண்டாவது நூலாகிய நூலக ஆட்சி நூலகத்தில் அன்றாடம் நடைபெறும் நூலக அலுவல்களை நூலகத் துறையிலுள்ளாரும், பொது மக்களும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றது. இதனைத் தமிழுலகம் நன்கு வரவேற்குமென எண்ணுகின்றேன்.

இந்நூலினை எழுதுவதற்கு நான் எடுத்தாண்ட மேற்கோள் நூல்கள் பின்வருவனவாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/9&oldid=1111534" இலிருந்து மீள்விக்கப்பட்டது