பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

99


கமலக்கண்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட திடீரென்று இப்படி ஒரு கேள்வியையோ, எதிர்ப்பையோ அவர் எதிர்பார்க்கவில்லை. ஆகவே திகைத்துப் போனார். ஒரு வசதியுள்ள பெரிய குடும்பத்து மனிதனைப் பார்த்து ஏழைகள் இப்படி ஆவேசத்தோடு கேள்விகள் கேட்க முடியும் என்பதையே அவரால் கற்பனை செய்ய இயலவில்லை. அத்தனை ஊழியர்களும் தனக்கும், தன் பணவளத்திற்கும், செல்வாக்கிற்கும், பயந்திருப்பார்கள் என்று நினைத்திருந்த அவரால் சிறிதுகூட, தாட்சண்யமே இல்லாமல் கூட்டத்தினர் இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுத்ததைத் தாங்கவே முடியவில்லை.

பழக்கத்தின் காரணமாகவும், உடம்பில் ஊறிப் போயிருந்த திமிரின் காரணமாகவும் இரைந்த குரலில், ‘நான்சென்ஸ்’–என்று கத்திவிட்டு அவர் உடனே நாற்காலியில் திரும்பவும் அமர்ந்துவிட்டார். அவ்வளவுதான் கூட்டத்தில் ஒரே கூச்சல், குழப்பம்.

“யாரைப் பார்த்து ‘நான்சென்ஸ்’—என்று கூறினீர்கள்? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்கள்” என்று. எல்லாரும் சேர்ந்து கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் கள்.அதுவரை பேசாமல் உட்கார்ந்திருந்த கட்சித்தலைவர் எழுந்திருந்து, “அன்பர்களே! நமது கட்சி ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் பெயர் பெற்றதாகும்.நாம் இப்படிக் காட்டு மிராண்டிகள்போல் பழகுவது நல்லதா என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்”—என்ற போதும் கூப்பாடு அடங்கவில்லை.

“யார் காட்டுமிராண்டி போல் பேசினார்கள் என்பதைத் தலைவரே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”–என்று சிலர் நடுக்கூட்டத்திலேயே எழுந்து நின்று மேடையை நோக்கிக் கத்தினார்கள்.

“கமலக்கண்ணன் அவர்களைக் கேவலம் வாய் தவறிக் கூறிய இந்த ஒரு வார்த்தைக்காக நாம் வாபஸ் வாங்கச் சொல்லக்கூடாது. கட்சிக்காகவே அவர் பெரும் முதல் போட்டுத் தினசரி ஏடு நடத்தி வருகிறார். அவரால் கட்சி