பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

101


உண்டு என்பதைப் புரிந்துகொள்ளாமல் கமலக்கண்ணனே பலமுறை யாரோ சொல்லிக்கொடுத்துப் பேசியது போல மேடையிலே அவற்றைப்பற்றி முழங்கியிருக்கிறார். இன்று அந்த உரிமையை அவராலேயே பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. “வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! ‘நான்சென்ஸ்’—என்ற வார்த்தையை வாபஸ் வாங்கு” எனச் சுதந்திரமான மனிதர்களின் கோபம் நிறைந்த குரல்கள் கூடம் நிறைய அதிர்ந்த போது தான் அவர் பயந்தார். “தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே இருக்கின்றன! இந்தச் சமயத்தில் இவர்களை எல்லாம் பகைத்துக் கொண்டீர்களானால் கட்சித் தொடர்பையே இழக்க நேரிட்டுவிடும். கவனமாக ஏதாவது சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பாருங்கள், கோபமாகப் பேசாதீர்கள்” என்று கட்சித் தலைவர் கமலக்கண்ணனின் காதருகே முணுமுணுத்தார். கமலக்கண்ணனுக்கும் தன் நிலைமை புரிந்துதான் இருந்தது. புதிதாகச் சேர்ந்த அந்தக் கட்சிக்காக எவ்வளவோ செலவழித்தது எல்லாம் தேர்தலை மனத்தில் வைத்துத்தான். பணத்தைச் செலவழித்து அடைய முயன்ற செல்வாக்கை ஒரு வார்த்தையைச் செலவழிக்கத் தயங்குவதன் மூலம் இழந்துவிடக் கூடாதென்ற முன் ஜாக்கிரதையுடன், “நண்பர்களே! என்னை மன்னியுங்கள். தவறாக எதையும் நினைத்து நான் கூறவில்லை. பழக்கத்தின் காரணமாக ‘நான்சென்ஸ்’ என்று வந்துவிட்டது. யாருடைய பெருமையையும் நான் வாய்தவறிக் கூறிய வார்த்தை குறைத்து விடாது என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமயோசிதமான தந்திரத்துடன் கூறி முடித்தார் கமலக்கண்ணன். ஊழியர்கள்கூட்டம் அமைதியடைந்தது. அதுதான் சரியான வேளையென்று—வேறு எதுவும் அவர்களுக்கு ஞாபகம் வருவதற்குமுன் நன்றி கூறிக் கூட்டத்தை முடித்துவிட்டார் கட்சித் தலைவர். கூட்டத்தில் நிகழ்ந்த குழப்பம் பத்திரிகைகளில் தவறிக்கூட வந்துவிடாமல் தலைவரும் கமலக்கண்ணனும் கவனித்துக் கொண்டார்கள்.

நெ–7