பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104
நெஞ்சக்கனல்
 


உள்பட எல்லோரும் ஆவலோடு அவர் முகத்தையே பார்க்கலானார்கள்.

“ஏன்னா பப்ளிவிடி லயன்லே ரொம்ப நாளா இருக்கேன். மாஸ் ஸைகாலஜி புரிஞ்சவன். நல்லா யோசிச்சு இதைச் சொல்கிறேன்...”

“அட சொல்லும் ஐயா! முன்னுரை வேண்டாம்” என்றார் கமலக்கண்ணன்.

பிரகாசம் கூறலானார்:–

“தண்ணீர் பிடிக்கச் சிரமப்படாத பெண்ணே கிடையாது. பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறதுனாலே கிணறு அல்லது குழாய்ச்சின்னம் வச்சிக்கலாம். குழாய் கூட போல்டா இராது. இராட்டினம் கயிறோடு கூடிய கிணறுதான் போல்டான பெரிய சின்னம். நீர் ஊறுகிற அம்சமாகையினால் மங்கலமாகவும் இருக்கும். தொழில் வளரும்கிறதுக்கும் நீர் மேலும் மேலும் ஊறுகிற கிணறு ஒரு சுபசூசகம்...”—

“எனக்குக் கிணறு பிடிச்சிருக்கு அதையே வச்சிக்கலாம்”—என்று தீர்க்கமான குரலில் கமலக்கண்ணனிடமிருந்து பதில் வந்தது. பிரகாசம் முகம் மலர்ந்தார். கமலக் கண்ணனுக்கே பிடித்தபின் மற்றவர்கள் ஏன் வாய் திறக்கிறார்கள்? எல்லோரும் ஏகமனமாகக் கிணற்றுச் சின்னத்தைப் பாராட்டினார்கள். பிரகாசத்தையும் பாராட்டினார்கள்.

“கிணறு விருத்திக்கு அடையாளம்னா...பேஷானசின்னமாச்சே அது”—சோதிடர் சர்மாவும் ஒத்துப்பாடினார். மறுநாள்காலை அதிகார பூர்வமாக அபேட்சை மனுதாக்கல் செய்து கிணற்றுச் சின்னமும் வேண்டப்பட்டது. சின்னமும் கிடைத்தது கிணற்றுச் சின்னத்திற்கு யாருமே போட்டியில்லை. அகில இந்தியாவிலேயும் கமலக்கண்ணன் என்ற ஒரே ஒரு சுயேச்சை அபேட்சகர்தான் கிணறு சின்னத்தையே கேட்டிருந்தார். அதனால் அதை இவருக்கு வழங்குவதில் எந்தச்சிரமமும் இருக்கவில்லை. கிணறுச்சின்னம் முடிவாகி அபேட்சைமனு தாக்கல் செய்து பத்திரிகைகளிலும் செய்தி