பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

நெஞ்சக்கனல்

தெரியும். கம்பெனிக் கட்டிடத்தின் நடுக்கூடத்தில் அக்கவுண்டண்டுகளும், கிளர்க்குகளும் மற்றவர்களும், அமரும் வரிசை வரிசையான நாற்காலிகளுக்கு நடுவே வகிர்ந்துகொண்டு செல்லும் அழகிய கம்பளம் விரித்த பாதையில் அவருடைய குளிர் சாதனம் செய்யப்பட்ட அறையை நோக்கி அவர் வரும்போதும் அறையிலிருந்து அவர் திரும்பிப் போகும்போதும் வரிசையாக எழுந்து நிற்கும் மனிதர்களும், ஒரு சீராகப் பரவி நிற்கும் மெளனமும் வெறும் பணத்தின் எதிரொலி என்றுமட்டுமே சொல்லிவிட முடியாது தான்.

எடுப்பான தோற்றமும் அவருக்கு இருந்த வசதியுள்ளவர்களின் உடம்பு, மேனி மினுமினுப்பு, கண்களின் பார்வையில் ஒருபகமை எல்லாம் அவருக்கும் வாய்த்திருந்தன. பணச்செழிப்பில் மிதந்ததனால் வாலிபம் கடந்த பின்னும் அதுகடந்துவிட்டது தெரியாத தோற்றமும், நடுத்தர வயதிலும் இளைஞர் போல் காண்கிற பொலிவும், அவருக்கு உரியவையாக இருந்தன. பல வசீகரங்களை உண்டாக்கித் தரும் ஒரே வசீகரம் பண வசதிதான் போலிருக்கிறது.

உள்ளே நுழைந்து சுத்தமாகப் பளீரென்று துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடித் தகடு பரப்பிய மேஜைக்கு எதிரே இருக்கையில் அமர்ந்து வழக்கமும், பழக்கமும் ஆகிவிட்ட காரணத்தில் குளிர் சாதன சுகத்தை உணரும் நிலையில்கூட இலயிக்காமல் குளிர்ச்சிக்கண்ணாடியும் சேர்த்துப் பொருந்திய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு அலட்சியமாக டெலிபோனை எடுத்து ‘ரோஸியை வரச் சொல்லுங்கள்’ என்று ஸ்டெனோவுக்கு அழைப்பு விடுத்தார் கமலக்கண்ணன். ரோஸி என்றழைக்கப்பட்ட ஆங்கிலோ – இந்தியப் பெண்மணி – ஒரு கொத்துக் கடிதங்களுடனும், கையெழுத்து வாங்குவதற்கு தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த ‘செக்’ புத்தகங்களுடனும் உள்ளே நுழைந்தாள். அபிநயத்துக்கு உயர்த்திய கையைப் போல் ஒரு கொத்துக் கடிதங்களுடனும் மற்றவற்றுடனும் வலது கையை மேலே உயர்த்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/12&oldid=1015995" இலிருந்து மீள்விக்கப்பட்டது