பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

121


வற்புறுத்திப் பேசினார்கள். கமலக்கண்ணனுக்கே அந்தப் பேச்சுக்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியை அளித்தன. சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தாலும் சட்டசபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருந்த தேசியக்கட்சியில் சேர்ந்து விடப் போவதாகவே அவர் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தார். கட்சி ஊழியர்கள் கூட்டத்திலும் அவரைப் பாராட்டுவதற்கு ஒர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் போவதற்கு மட்டும் கமலக்கண்ணன் பயந்து நடுங்கினார். கட்சி ஊழியர்கள் கூட்டமென்றாலே அவருக்குப் பயமாக இருந்தது. பழைய ஊழியர் கூட்டத்தில் நடந்ததை நினைத்த போது சிம்ம சொப்பனமாகவும் இருந்தது. ஆனால் இப்போது ‘கட்சி ஊழியர்கள்’ நடத்தும் பாராட்டுக்கூட்டத்திற்கு வரமாட்டேனென்று மறுப்பதிலும் தர்ம சங்கடம் இருந்தது. அதே கட்சியின் சார்பில் ஒரு மந்திரியாகப் பதவி வகிக்க நாளைக்குச் சந்தர்ப்பம் இருக்கும்போது இன்று அவர்களைப் பகைத்துக்கொள்வது நன்றாக இராதென்றும் தோன்றியது. கட்சித் தலைவரையும், நகரக் குழுவின் காரியதரிசியையும் மட்டும் அந்த ரங்கமாக விசாரித்து வைத்துக்கொண்டார்.


“என்னவோ ஊழியர் பாராட்டுக் கூட்டம்றீங்க...! உங்ககட்சி ஊழியர்களிலே நம்மை மனசாரப் பாராட்டறவன் எவனும் இருப்பான்னு எனக்குத் தோணலை. முன்னாடியே ஒருதடவை தகராறாயிருக்குது, அதனாலேதான் பயப்படறேன். எவனாவது கன்னாப்பின்னான்னு நடந்துக்கிட்டான்னா நான் ரொம்பப் பொல்லாதவனாயிருப்பேன்”–என்று முன்னெச்சரிக்கை போல் அவர்களிடம் சொல்லியும் வைத்திருந்தார் கமலக்கண்ணன். ஆனால் அவர்களோ தம் செவிகளால் நம்ப முடியாத ஒரு செய்தியை அவருக்குத் தெரிவித்தார்கள்.

“இப்ப அப்படியெல்லாம் நடக்காது. நீங்க எலெக்ஷன்லே ஜெயிச்சிருக்கீங்க...அந்த ஆள் காந்திராமனே உங்களுக்கு மாலைபோட வந்தாலும்கூட ஆச்சரியப்படறத்துக்கில்லே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/123&oldid=1048869" இலிருந்து மீள்விக்கப்பட்டது