பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
11
 

கதவை இடது கையால் ஒசைப்படாமல் திறந்து அவள் உள்ளே நுழைந்ததே ஒரு சிறிய நடனம் போல் இருந்தது. அளவுக்கதிகமாகவே அவள் பூசியிருந்த யார்ட்லி பவுடரின் சுகந்தம்அறையில் குப்பென்று பரவியதும் கமலக்கண்ணன் தலை நிமிர்ந்தார். வாசனையும், வாசனையற்ற தன்மையும் குளிர் சாதனம் செய்யப்பட்ட அறையில் குப்பென்று பரவுவதுண்டே தவிர மெதுவாகப் பரவுவதே இல்லை.

“இன்றைக்கு வந்த கடிதங்களில் நீங்கள் பார்க்கவேண்டிய கடிதங்கள்” என்று சொல்லிவிட்டுக் கடிதங்களை ஒரு புறமும், வேறு வேறு பாங்குகளுக்கான ‘செக்’ புத்தகங்களை இன்னொரு புறமுமாக மேஜைமேல் வைத்தாள் ரோஸி. பின்பு கையில் தயாராகக் கொண்டுவந்திருந்த பதில் கடிதங்களைக் குறிப்பெடுப்பதற்கான நோட்டுப் புத்தகத்தையும் கூராகத் தீட்டிய பென்சிலையும் வைத்துக்கொண்டும் சாய்ந்தாற் போல் அங்கேயே நின்று கொண்டாள் அவள்.

கமலக்கண்ணனோ கடிதங்களை முதலில் பார்ப்பதில் சலிப்புற்றவர்போல்–அல்லது அதைவிட வேகமாகச் செய்து முடிக்கிற காரியமான செக்கில் கையெழுத்திடும் காரியத்தை முதலில் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணங்கொண்டவர் போல் செக்கில் அலட்சியமாகக் கையெழுத்திடத் தொடங்கினார். செக்கில் அலட்சியமாக கையெழுத்திடத் தொடங்குகிற அந்த வேலையும் பரம்பரைப் பணக்காரக் குடும்பத்துக்கே உரிய அலட்சியத் தோடும் வேகத்தோடும் நடைபெற்றது. ‘செக்’ யாருக்குக் கொடுக்கப்படுகிறது? – எதற்தாகக் கொடுக்கப்படுகிறது? என்ன தொகைக்குக் கொடுக்கப்படுகிறது? – என்பதைப் பற்றியெல்லாம் அதிகம் சிரத்தை காட்டாமல், அதிகம் கவலைப்படாமல், சோம்பலோடும் அவசரத்தோடும் சிறு பிள்ளை கிறுக்குவதுபோல் கையெழுத்துக்களை அவற்றில் கிறுக்கித்தள்ளினார் கமலக்கண்ணன் அந்தக் கையெழுத்துக்களில் அவருடைய முதலெழுத்தான ‘டி’ என்பதையும்.அதற்கு அடுத்தாற்போல் பெயரின் முதல் எழுத்தாகிய ‘கே’ என்பதையும் தான் அரிய பெரிய முயற்சியின் பேரில் சிரமப்-