பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நெஞ்சக்கனல்


மாலையணிவித்த காந்திராமனின் நினைவு ஏனோ அப்போது அவருள் எழுந்தது!

‘அந்தக் காந்திராமனை அப்படிப் பேசத் துணியச் செய்த நெஞ்சின் கனல் எது? தன்னை அப்போதும்–இப்போதும் பேசவிடாமல் செய்த நெஞ்சின்பேடித்தனம் எது?’ என்று சிந்தித்து எல்லை காணமுடியாமல் ஓரிரு விநாடிகள் உள்ளேயே குழம்பினார் கமலக்கண்ணன் காந்திராமனுக்குள் எரிகிற சுதந்திர–சுதேசியத் தன்மரியாதைக் கனல் தனக்குள் பணம்–பதவி–செல்வாக்கு எல்லாவற்றாலும் அறிவிக்கப்பட்டு விட்டதோ – என்றெண்ணியபோது அவர் உடல் நடுங்கியது.

“என்ன யோசிக்கிறீங்க...? நான் சொல்றபடி கேளுங்க... ‘பட்ஜெட்’ சமயத்திலே நாலுபேரு இந்த நாற்றத்தைக் கையிலே வச்சுக்கிட்டு வம்புபேச இடம் கொடுத்துடப்பிடாதுங்க...?”

என்று கலைச்செழியன் தன் கையிலிருந்த உண்மை ஊழியனைக் காண்பித்து வற்புறுத்தத் தொடங்கினான்.

பேசாமல் டிராயரைத் திறந்து எண்ணிப்பார்க்காமலே ஒரு கட்டு நோட்டுக்களை அடுக்காகக் கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன். அப்படிக் கொடுக்கும்போது தனது கை இப்படிப் பலவீனங்களுக்காகக் கொடுத்துக் கொடுத்து மேலும் பலவீனத்தை அடைவதுபோல் ஒருணர்வு அவரை உள்ளே அரித்தது.

கிழிந்த மேல்துண்டு தவிர வேறு ஆஸ்தி இல்லாத அந்தக் கதர்ச்சட்டைக் காந்திராமனை இப்படி யாரும் மிரட்ட முடியாதென்று நினைத்தபோது சமூகத்தின் அந்தரங்கமான பலங்களைத் தான் எந்த நிலையில் இழந்திருக்கிறோம் என்பதையும்–அந்தப் பாமரத் தொண்டன் எந்த எல்லையில் எந்த அடிப்படையில் பலப்பட்டிருக்கிறான் என்பதையும் மனத்திற்குள் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தொடங்கினார் அவர்.