பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

நெஞ்சக்கனல்


அவரிடம் நீட்டினான். அதை வாங்கிக் கோபத்தோடு ஆத்திரம் தீர அவன் முன்னாலேயே கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட்டார் அவர். அவன் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு விடைபெற்றான். அவனுடைய தலை மறைந்ததும் மறுபடி குப்பைத் தொட்டியிலிருந்து அந்த ‘உண்மை ஊழியனை’– எடுத்துக் கிழிசல்களை ஒட்ட வைத்து ஏதோ ஒர் ஆவலில் படிக்க முயன்றார் கமலக்கண்ணன். அப்போது அறைவாயிலில் மனைவியின் தலை தெரிந்தது – மறுபடியும் அதைக்கசக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

“என்னங்க...இது? ஏன் என்னவோ போலிருக்கீங்க...”

“ஒண்னுமில்லே! ‘புது பட்ஜெட்’ வரணும்–அதுதான் ஒரே யோசனை”...

“சாப்பிட்டுட்டு யோசிக்கலாம்...வாங்க...டைனிங் டேபிளிலே ‘குழந்தைகளும்’ காத்துக்கிட்டிருக்காங்க...”

அவர் சாப்பிடப் போனார். சாப்பாட்டுக்குப் பின்னும் இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தபடி இருந்தார் அவர். கலைச்செழியன் எப்போதோ தான் மாயாவுக்கு நெக்லேஸ் கொடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகக்காட்டி மிரட்டுவது போல் ஒரு காட்சியைத் தாமாகக் கற்பித்துக் கொண்டு அஞ்சினார் கமலக்கண்ணன். இரவுமுழுவதும் பலவீனங்களால் வந்த பயமே அவரை வாட்டியது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர முடிந்தது. மறுநாள் காலை யில் கடம்பவனேச்வரர் கோயில் திருப்பணியின் செயற்குழுக் கூட்டத்தைத் தம் வீட்டிலேயே கூட்ட ஏற்பாடு செய்திருந்தார் அவர். எல்லாரும் வந்து ஹாலில் கூடிவிட்டார்கள். அவரோ ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருந்தார்.

அதுவரை எல்லாரும் காத்திருந்தார்கள். அப்படிக் காத்திருந்தவர்களில் பழைய அறநிலைய மந்திரி விருத்தகிரீசுவரனும் ஒருவர். அப்படி அவர்களைக்காக்கவைத்ததற் காக ஒருமுறை கருதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரானாலும்–உள்ளுர மந்திரி விருத்தகிரீசுவரனைக் காக்கவைத்ததில் பழிதீர்த்த மகிழ்ச்சி இருந்தது அவருக்கு. ஒன்பதரை-