பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
13
 

பெரியபெரிய பித்தான்கள் வைத்துத் தைக்கப்பெற்ற அந்த க்ளோஸ் கோட்டிலும், பாண்டிலும், புகுந்துகொண்டு அவர் அளிக்கிற தோற்றம்கூட அவர் முகத்தின் இளமை யையோ பொலிவையோ, மாற்றி விடுவதாயில்லை. இளமைக்கு–இளமையாக நிருபித்துக் கொள்வதற்கு அடையாளமென்று சிலர் கருதும் அரைக்கை ஸ்லாக் அணிந்து கொள்வது அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. தங்கக் கம்பிகள் மின்னும் ப்ரேம் போட்ட அந்த மூக்குக் கண்ணாடியும், நீண்ட மூக்கும், சிவந்த உதடுகளும், அளவாகப் பேசும்பேச்சும், சிரித்தால் வைத்துக்கட்டிவிட்டாற் போன்ற அந்தப் பல்வரிசையின் வெண்மையும் – அவரைத் தனி கெளரவத்தோடு உயரத்தில் தூக்கி நிறுத்திக் காட்டக்கூடியவையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்கமுடியாது. பொம்மலாட்டத்தில் பொம்மையின் இயக்கத்துக்கான சகல கயிறுகளும் – பின்னாலிருந்து இயக்குகிறவனின் கைகளில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் வாழ்க்கையின் இளமை, புகழ், பொலிவு, அந்தஸ்து, சௌகரியங்கள் எல்லாம் பணத்தின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பணம்தான் பின்னாலிருந்து இவற்றையெல்லாம் இயக்குகிறது என்பதைக் கமலக்கண்ணன் நிரூபித்துக் கொண்டிருந்தார். கமலக்கண்ணனைப் போன்ற இன்னும் சிலரும் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ அவர் ‘செக்’ புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறாரே: சங்கீத சபைக் கட்டிட நிதிக்குப் பத்தாயிரம், கடம்பவனேசுவரர் கோயில் புனருத்தாரண நிதிக்கு ஐயாயிரம்; காந்திய சமதர்ம சேவா சங்கத்திற்கு மூவாயிரம்–என்று அவர் போடும் நன் கொடைக் கையெழுத்துக்களைப் பார்த்தாலே ஏழையாகிய உங்களுக்கும், எனக்கும் தலை சுற்றுகிறதல்லவா? தலை சுற்றாமல் வேறென்னசெய்யும்? இதில் சில தொகைகளைக் கணித பாடத்தில் படித்ததைத் தவிரத் தொட்டு எண்ணிப் பார்க்கும் அத்தனை வசதி உங்களுக்கோ