148
நெஞ்சக்கனல்
வைத்தார் கமலக்கண்ணன் எல்லாருடனும் மந்திரி கலகலப்பாகப் பழகினார். பேர் தான் ‘பஃபே’ என்றாலும் ஏராளமான வகைகள் டேபிளில் இருந்தன. எல்லாம் பிரமாதமான தயாரிப்புக்கள். ‘வெஜிடேரியன் டேபிள்’, நான் வெஜிடேரியன் டேபிள்’... என்று இரண்டும் தனித்தனியே இருந்தன. இரண்டிலும் ஏராளமான பதார்த்த வகைகள் இருந்ததாலும் எல்லாரும் பேசிக்கொண்டும், உலாவிக்கொண்டும் சாப்பிட்டதாலும் விருந்து முடியப்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மாலையில் ஃபிலிம் எண்டர்பிரைசர்ஸ் அசோசியேஷன் கூட்டம் இருந்ததனால் மந்திரி ஓய்வு கொள்வதற்காக கெஸ்ட் ஹவுஸ் போய் விட்டார். கமலக்கண்ணன் மாலை ஆறு மணிக்குக்கஸ்ட்ஹவுஸ் சென்று டில்லி மந்திரியை அழைத்துக் கொண்டு ஃபிலிம் வர்த்தகசபைக் கூட்டத்திற்குப் போவதென்று திட்டமிட்டிருந்தார். ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள் பிரமாதமாகக் கண்ணாடித்தாளில் அழைப்பிதழ்கள் அச்சிட்டு அனுப்பியிருந்தனர். பரத நாட்டியத்துக்குக் கூட மாயாதேவியைத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக அவர்கள் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்களா அல்லது தனக்கு மாயாதேவியை ஏற்பாடு செய்தால் தான் பிடிக்கும் என்று அவர்களாகவே அநுமானித்துக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்களா என்பது கமலக் கண்ணனுக்குத் தெரியவில்லை. ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள். மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. தர்மசங்கடமான நிலைமையில் அவர் இருந்தார். மாயா தேவியைக்கண்டும் காணாமலும் பழகிக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்த நினைப்பில் மண்ணைப்போட்டுவிட்டு அவர் தலைமையிலேயே மத்திய மந்திரிக்கு நடக்கும் ஒரு விருந்தில் மாயாதேவியின் நடனத்தையும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் சேர்த்துப் போட்டுவிட்டதை அவ்வளவாக அவரால் இரசிக்க முடியவில்லை. தனக்கும் மாயா தேவிக்கும் இடையே உள்ள நட்பு நகரப் பிரமுகர்கள் வட்டாரத்தில் ஓரளவு தெரியுமாகையினால் யாராவது இதை வைத்து வம்பு பேசப் போகிறார்களே என்று பயந்தார் அவர்.