பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

149


கூட்டங்களில் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பலர் நடுவே மந்திரி என்ற அந்தஸ்தோடு தான் தலை நிமிர்ந்து நிற்கிற வேளைகளில் மாயா எதிர்ப்பட்டுத் தன்னை வணங்கு வதையோ, நெருக்கம் தெரிகிற பாவனையில் புன்னகை பூப்பதையோ அவர் பலமுறை தவிர்க்க முயன்றிருக்கிறார். இப்போதோ இந்த டில்லி மந்திரி ரமேஷ்சிங் விஷயத்தில்– இதுமாதிரி ஆகிவிட்டது. நிகழ்ச்சி நிரல் எல்லாம் அச்சாகியாவருக்கும் அனுப்பப் பட்டுவிட்டதனாலும், பத்திரிகைகளில் வெளிவந்து பரவிவிட்டதனாலும் இனி மாயா தேவியை அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக்குவதென்பது முடியாத நிலை ஆகியிருந்தது கமலக்கண்ணனுக்கு. ஆகவே தர்மசங்கடத்தோடும், பயத்தோடும், தயக்கத்துடனும் தான் அந்த விருந்துக்கு டில்லி மந்திரியோடு போனார் கமலக்கண்ணன் .

ஃபிலிம் வர்த்தக சபை விருந்தில் டில்லி மந்திரி ஆங்கிலத்தில்தான் பேசினார். இந்தியில் பேசினால் ஒருவேளை அங்கு வந்திருந்த அழகிய பெண்களும் இளம் எக்ஸ்ட்ராக்களும், தன்னுடைய ஹாஸ்யங்களுக்குச் சிரிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்துதான் அப்படிப் பேசுகிறார் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்துகொண்டார்.

நடிகை மாயாதேவியின் பரதநாட்டியம் நடந்தபோது டெல்லி மந்திரி வாஹ், வாஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு தரம் தலையாட்டிக் கொண்டிருந்தார். மந்திரியின் ஒரு பக்கம் கமலக்கண்ணனும் மறுபக்கம் பிலிம் வர்த்தகசங்கத் தலைவரும் அமர்ந்திருந்தனர். டெல்லி மந்திரி தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்த போது மாயாவைப் பற்றிக் கமலக்கண்ணனிடம் ஏதோ கூறத் தொடங்கவே, பிலிம் சங்கத் தலைவர் குறுக்கிட்டு, “அவருக்குத் தெரியாதுங்களா? ஹீ...இஸ்...ஆல்ரெடி..” என்று ஏதோ டெல்லி மந்திரியிடம் சொல்லத் தொடங்கிய அந்தவேளையில் கமலக்கண்ணனின் முகம்போன போக்கைப் பார்த்து மேலே ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டார். இதையெல்லாம்

நெ.–10