உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

நெஞ்சக்கனல்

றெல்லாம் பாராமல்,அவர்களுடைய அதர்மத்தை எதிர்த்துப் போரிடவில்லெடுக்கும். துணிவும் சொல் எடுக்கும் துணிவும் இன்றைய மனிதனிடமும் அபூர்வமாக இருக்கிறது. அரசியலில் பதவியிலும், அதிகாரங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் குருட்சேத்திரப் போர்க்களத்தில் கெளரவர்களைப் போல் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பாசமும், உறவும் கருதாமல் அறப்போர். நடத்துவதற்கோ காந்திராமனைப் போன்றவர்கள் சமூகம் என்ற பாண்டவர்களாக நியாயம் என்ற கண்ணபிரானின் துணையோடு என்றும் எதிர் நிற்கிறார்கள். எனவே குருட்சேத்திரப் போர் என்பது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே உள்ள தர்ம அதர்மப் பிரச்சினைகள் உள்ளவரை நித்தியமாக இருக்கும் ஒரு தத்துவமே.

புகழ், பதவி, அதிகாரம், பணம், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் கமலக்கண்ணன் தன்னுடைய மனோபயங்களைத் தவிர்க்கமுடியவில்லை. அரும்பாடுபட்டு அடைந்த தேர்தல் வெற்றி...அதன் காரணமாகக் கிடைத்த மந்திரி பதவி எல்லாவற்றையும் எண்ணி எண்ணி அஞ்சினார் அவர். விருப்பு வெறுப்பற்ற பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் பயப்படாமல் இருக்கமுடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரை தான் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை. தலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்புதான் பயம் என்பதே ஆரம்பமாகிறது. அந்தஸ்தின் உயரத்திற்குப் போன பின்புதான் பயம் என்ற பள்ளம் கண்ணுக்குத் தெரிகிறது, பயமுறுத்துகிறது.

‘இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கிவிடுவோமோ...’ என்றபயமும், இதற்கும் மேலே போக வேண்டுமே என்ற சுயநலமும்தான் இப்போது அவரைக் கவலைப்படச் செய்தன. ஆனால் இன்னும் ஒருவாரத்தில் பட்ஜெட் அறிவிக்கப் படவேண்டுமென்ற பெரிய கவலையில் இந்தச் சிறிய கவலைகளை மறக்க முடிந்தது. மாயாதேவிக்கு வேண்டிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/154&oldid=1049071" இலிருந்து மீள்விக்கப்பட்டது