பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

153

ஆளுக்குப் புதிய பஸ்ரூட் பெர்மிட், ‘உண்மை ஊழியனின்’ பயமுறுத்தல், கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரண நிதி, தினக்குரலின் சர்க்குலேஷன் நாளுக்கு நாள் குறைவதாகப் பிரகாசம் கூறிய கசப்பான நிலைமை, ஆகிய எல்லாவற்றையும் மறந்து ‘பட்ஜெட்’டிற்கு உருக்கொடுப்பதில் அவர் ஈடுபட்டார். காரியதரிசிகளும், பொருளாதார நிபுணர்களும் உதவினர். சிலதினங்களில் ‘பட்ஜெட்’ தயாரிப்பு அவருடைய இலாகா அளவில் நிறைவேறி முடிந்துவிட்டது அதைவெளியிட வேண்டிய வேலை தான் மீதமிருந்தது.

நாளைக்கு விடிந்தால் அசெம்பிளியின் பட்ஜெட் செஷன் ஆரம்பமாகிறது. முதல் நாளிரவு ஆவலினாலும், பரபரப்பினாலும், பயத்தினாலும் கமலக்கண்ணனுக்குத் தூக்கமே இல்லை. விடிந்ததும் நீராடி உடை மாற்றிக் கொண்டு கோவிலுக்குப் போய் வந்தார். அசெம்பிளிக்குப் புறப்படுமுன் பங்களாவின் பின்கட்டுக்குப் போய்த் தாயைப் பார்த்து வணங்கி ஆசிபெற்றார்.

பட்ஜெட் செஷன் என்பதால் அன்று அசெம்பிளியில் சகல எம்.எல்.ஏக்களும் வந்திருந்தார்கள். ‘பட்ஜெட்’டைச், சமர்ப்பித்து அவர் உரை நிகழ்த்தினார். அவருடைய கட்சி எம்.எல்.ஏக்கள் நிர்ப்பந்தமாக அவரது பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டிய நிலையிலிருந்தார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ நிர்ப்பந்தமாக அதை எதிர்க்க வேண்டிய நிலையிலிருந்தார்கள். கேள்விக்கணைகளும் கண்டனக் கணைகளும் கிளர்ந்தன. சாயங்கால செஷனுக்கு முன் மந்திரி கமலக்கண்ணன் அறையில் தற்செயலாக அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அவருடைய கட்சி எம். எல்.ஏக்கள் சிலரே பட்ஜெட்டைப்பற்றி அதிருப்தி தெரிவித்துத் தனிப்பட்ட அபிப்பிராயம் கூறினார்கள். மாலை செஷனில் எதிர்க்கட்சித் தலைவர் ‘இது பொதுமக்களுக்குப் பயன்படாத பட்ஜெட்’–என்று காரசாரமாக வெளுத்துக் கட்டிவிட்டார். அதோடு சபை கலைந்தது மறுநாள் பட் ஜெட் விவாதங்கள் தொடரும் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அவசரஅவசரமாக வீட்டுக்குவந்து சாயங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/155&oldid=1049072" இலிருந்து மீள்விக்கப்பட்டது