பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

நெஞ்சக்கனல்


காலப்பத்திரிகைகளை எல்லாம் வரவழைத்துப் படித்தார் கமலக்கண்ணன். அவரே நடத்தும் ‘தினக்குரல்’ தவிர வேறு எல்லாப் பத்திரிகைகளும் பட்ஜெட் சுகமில்லை என்பது போல் தாக்கி எழுதியிருந்தன. தினக்குரலில் மட்டும் பட்ஜெட் சமர்ப்பிக்கும் முன் அமைச்சர் தன் அன்னையைக் கண்டு ஆசிபெற்றார்– ஆலயம் சென்று வழிபட்டார் – என் பது போன்ற செய்திகள் முன் பக்கத்தில் வந்திருந்ததோடு ‘ஏழைக்கும் செல்வருக்கும் ஏற்ற பட்ஜெட்’–என்ற தலைப்பில் தலையங்கமும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. தன் பத்திரிகையிலேயே வெளிவந்த அந்த பாராட்டினால் மட்டும் அவர் திருப்தியடைந்துவிட முடியவில்லை. அதே சமயத்தில் ஒரு திருப்தியும் இருந்தது. எவ்வளவு நல்ல பட்ஜெட் ஆனாலும் தாக்கி எழுதுவதுதான் பத்திரிகைகளின் வழக்கம். எனவே பத்திரிகைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை என ஆறுதல் கொள்ளவும் முடிந்தது. இந்த அம்சத்தில் பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் ஒரே மாதிரித்தான் என்று தோன்றியது. மறுநாள் பட்ஜெட் மீது நடைபெற இருக்கும் விவாதத்தில் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற தயக்கமிருந்தாலும், முறை மீறவிடாமல் சபாநாயகர் ஓரளவு துணை செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்றிரவு மாயாதேவி மீண்டும் அவருக்கு ஃபோன் செய்தாள்.

“வரவர உங்க தயவே இல்லை! என்னோட குறவஞ்சி நாட்டிய நாடக அரங்கேற்றத்துக்கு அழைப்பு அனுப்பிச்சேன், நீங்க வரவே இல்லை! டெல்லி மந்திரி ரமேஷ்சிங் வந்திருந்தப்ப ரொம்ப பாராமுகமாக நடந்துக்கிட்டீங்க. ‘பஸ்ரூட்’ விஷயமாகச் சொன்னேன். இதுவரைக்கும் நீங்க ஒண்ணுமே கவனிக்கல்லே...? என்மேல் ஏன் இத்தினி கோவமோ தெரியலே. நான் என்னிக்கும் உங்களவள்தான். என்னை நீங்க மறந்துடப்பிடாது இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே பட்ஜெட்கிட்ஜெட் எல்லாம் தயாரிச்சுக் களைப்பா இருப்பீங்களே? இன்னிக்காவது வந்துபோங்களேன்...” என்று கெஞ்சினாள் அவள். அவருக்கும் போக