பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

நெஞ்சக்கனல்

பலமாக இருந்தன. யார் எப்போது நிதி மந்திரியாக இருந்தாலும் அவை இருக்கும், ‘காந்திராமனின் சர்வோதயக் குரல்’ வாரப் பத்திரிகையில் கூடக் ‘கமலக்கண்ணனின் பட்ஜெட் தேசியக் கட்சியின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக இல்லை’ என்பதை விவரித்துத் தலையங்கம் எழுதப்பட்டிருந்ததைக் கமலக்கண்ணனே படித்துப் பார்த்தார். ஒரே கட்சியைச்சேர்ந்தவராக இருந்தும் காந்திராமன் அப்படிச் செய்திருப்பதைக் கண்டு கமலக்கண்ணன் பயந்தார். தன் மேல் காந்திராமனுக்குச் சொந்தமாக விரோதங்கள், வெறுப்புக்கள் இருந்தாலும் பட்ஜெட் விஷயத்தில் கட்சியை விட்டுக் கொடுத்தாற்போல் காந்திராமன் எழுத மாட்டார் என்று நினைத்திருந்தார் கமலக்கண்ணன். இப்போது அந்த நம்பிக்கையும் போய்விட்டது கட்சி அலுவலகத்திற்கு ஃபோன் செய்து தலைவரிடம் பேசினார். “இந்தக் காந்திராமன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனே அவரைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் இல்லாவிட்டால் போகப் போகத் தொல்லைதான்"– என்று கண்டிப்பாகக் கூறினார் கட்சித் தலைவர் அதைச் செய்ய அஞ்சினார்.

“அது நடக்காத காரியம் சார்! அவர் நேஷனல் மூவ் மெண்டிலே பலமுறை ஜெயிலுக்குப் போனவர். அசல் தியாகி. அந்த நாளிலே மகாத்மாஜியோட தமிழ்நாடு பூரா சுற்றியிருக்கிறார். தியாகிகளுக்காக அரசாங்கம் நிலம் கொடுத்த போது கூட, ‘இப்படி நிலம் வாங்கிக்கறதுக்காக அன்னிக்கு நான் தியாகம் செய்யலே! தியாகத்துக்காகவே தான் தியாகம் செய்தேன். தயவுசெய்து அதற்குக் கூலி கொடுத்து என்னை அவமானப்படுத்தாதீங்க’ன்னு அதை மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட ஆளை நான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியேற்றினா எம்பேரு கட்சிப்பேரு” எல்லாமே கெட்டுப் போயுடும். இதுமட்டும் என்னாலே முடியாது. தயவுசெய்து நீங்க என்னை மன்னிக்கணும்...”

இதற்குமேல் கட்சித் தலைவரைக் கமலக்கண்ணனால் வற்புறுத்த முடியவில்லை. ‘காந்திராமன் காலைவாரி விடுகிறார்’– என்றதலைப்பில் தினக்குரலில் ஒரு பதில் தலையங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/158&oldid=1049076" இலிருந்து மீள்விக்கப்பட்டது