பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

161


மிருந்து மனுவும் வந்திருக்கிறபோது. வேறொருவருக்கு அது கொடுக்கப்பட்டதைப் பார்த்து அவர்களே வயிறெரிந்து இதைப் பெரிதாகக் கிளப்புவார்கள். அவ்வளவேன்? மாயா சிபாரிசு செய்த பார்ட்டி இப்படிப்பட்டவர்–பழைய தேச விரோதப் பேர்வழி என்றெல்லாம் தெரிந்திருந்தால் நானே இதற்குத் துணிந்திருக்க மாட்டேன்! ஹீம்...எப்படியோ இந்த மாதிரி ஆகிவிட்டது! இதை என்னுடைய போதாத வேளை என்று தான் சொல்லவேண்டும்’–என்று நினைக்கலானார் அவர். விஷயம் அதோடு போய்விடவில்லை. மறு– நாள் செகரட்டேரியட் போனபோது முதன் மந்திரியின் அறையிலிருந்து ஃபோனில் கமலக்கண்ணனுக்கு ஒர் அழைப்பு வந்தது. ‘ஒருநிமிஷம் தயவு செய்து இப்படி வந்து விட்டுப் போறீங்களா மிஸ்டர் கமலக்கண்ணன்...உங்களிடம் நேரில் கொஞ்சம் பேசணும்’–என்று முதன் மந்திரியே பேசிக் கூப்பிட்டார்.வயது மூத்தவரும் நிர்வாகத்தில் சூரரும், அநுபவசாலியுமான அந்த முதன் மந்திரியிடம் கமலக்கண்ணனுக்கு பயமே இருந்தது. அவர் யாரையும் இப்படிக் கூப்பிட்டுப் பேசுவதே அபூர்வம். சதா காலமும் ஃபைல் கட்டுக்களில் மூழ்கியிருப்பவர் அவர். அவரைத் தேடிச் செல்லும் போது பஸ்ரூட் விஷயமாகத் தான். அவர் தன்னைக் கூப்பிடுகிறார் என்பது போல் உணர்ந்ததும், ‘கடவுளே! தயவுசெய்து இது வேறு விஷயமாக இருக்கட்டுமே’–என்று பிரார்த்தித்துக் கொண்டு தான் போனார் கமலக்கண்ணன்.

முதன்மந்திரி அவரை முகமலர்ச்சியோடு வரவேற்றார். அலுவலக அறைக்கும் அப்பால் உள்ளே தள்ளி இருந்த தம்முடைய ‘லஞ்ச்’ரூமிற்கு அழைத்துச் சென்று மிகவும் அந்தரங்கமான முறையில் இரகசியமாகவே பேச்சைத் தொடங்கினார். ஆனால் பேச்சு மட்டும் பஸ்ரூட் விஷயமாகவே இருந்தது:–

“என்ன மிஸ்டர் கமலக்கண்ணன், இதில் இப்படி நீங்கள் போய் மாட்டிக்கொள்ளலாமா? எத்தனையோ தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நன்றாக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/163&oldid=1049467" இலிருந்து மீள்விக்கப்பட்டது