பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

நெஞ்சக்கனல்


சிந்தனை ஒடியபோது அவரால். மேலே சிந்திக்க முடியவில்லை.

‘அந்த முதலமைச்சருக்குச் சொந்த வீடு கிடையாது. மனைவி மக்கள் குடும்பம் கூடக் கிடையாது. தனிக்கட்டை சிறையிலே மலர்ந்த தியாகம்... நாடு விடுதலை பெற்ற பின்பு தொண்டாக மாறியிருக்கிற மாறுதலைத் தான் அவரிடம் இன்று காண முடிந்தது. மறுபடி அந்த எளிய தொண்டரின் அரிய மனத்திலே எப்படிப் பழைய நன்மதிப்பைப் பெறுவதென்பது தான் கமலக்கண்ணனின் இடைவிடாத சிந்தனையாயிருந்தது. செக்ரட்டேரியட்டிலிருந்து வீடு திரும்பியதும் கூட அதே சிந்தனைதான் தொடர்ந்தது. அந்த வேளை பார்த்து மாயாதேவியிடமிருந்து ஃபோன் வந்தது எரிந்து விழுந்தார் அவர். அவருடைய கோபத்துக்குக் காரணம் புரியாமல் மாயா ஃபோனில் பதறிப் போய்க் கொஞ்ச முயன்றாள். அவரே கோபம் தணியாமலே பேச்சைப் பாதியில் வெட்டி ஃபோனை வைத்துவிட்டார். கவலையோடும் சிந்தனையோடும் பங்களா ஹாலில் உட்கார்ந்திருந்த அவரைத் தேடிப் புலவர் வெண்ணெய்க் கண்ணனார் அப்போது எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். மனிதனுக்குச் சில பலவீனமான வேளைகளில் எதிரே தென்படுகிற ஒவ்வொருவரும் தன்னைவிடப் பலமானவர்களாகத் தோன்றுவதுண்டு. புலவர் வெண்ணெய்க்கண்ணனாரும் கமலக்கண்ணனுக்கு அப்போது அப்படித்தான் தோன்றினார். சிறிது நேரம் புலவரிடம் வேறு எது எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, பின்பு நடந்ததை எதுவும் கூறாமல் முதலமைச்சருடைய பெயரைக்கூறி, “அவருடைய மனம் திருப்திப்படுகிற மாதிரி ஏதாவது செய்யனும்...! உங்களுக்கு ஏதினாச்சும் ஐடியா தோணினாச் சொல்லுங்களேன்...பார்ப்பம்...’ என்றார் கமலக்கண்ணன்.

புலவர் சிறிது நேரம் தீவிரமாகச் சிந்திக்கலானார். பின்பு நிதானமாகக் கமலக்கண்ணனிடம் கூறினார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/166&oldid=1049475" இலிருந்து மீள்விக்கப்பட்டது