பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

165


“மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லுகிற வழியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமொன்றில் அன்னாருக்குச் சீரியதோர் சிலை எடுத்தல் வேண்டும்.”

“சிலையா? உயிரோட இருக்கறப்பவேயா சிலை வைக்கிறது? நல்லா இருக்குமா?”

இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது பிரகாசமும், கலைச்செழியனும் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் புலவர் முகமலர்ந்து, “வேண்டுமானால் இவர்களையே கேட்டுப் பாருங்களேன்? என் முடிவை இவர்களும் ஒப்புக்கொள்கிறார்களா, இல்லையா, பார்க்கலாம்!” என்றார். கமலக் கண்ணன் நிலைமையைப் பிரகாசத்துக்கும், கலைச்செழியனுக்கும் விளக்கிப் புலவரின் யோசனையையும் கூறினார்.

“ஆமாங்க...இந்த பஸ்ருட் விஷயமா சீஃப் மினிஸ்டருக்கு ஏதோ உங்க மேலே மனவருத்தம்னு பராபரியாக் காதிலே விழுந்திச்சுங்க. அதைச் சரிக்கட்ட இது நல்ல யோசனைதான். சிலை வைக்க ஆகற செலவைக்கூட பப்ளிக்லே வசூல் பண்ணிடலாம். அவருக்கும் மனசு நிறைஞ்சிடும்” என்று பிரகாசமும் கலைச்செழியனும் ஏகமனதாக ஒப்புக்கொண்டார்கள்.

“அவரு ரொம்பக் கறாரானவரு. சம்மதிக்கணுமே?”

“சம்மதிக்காம் என்னங்க? மத்தவங்க தன்னைக் கால்லே விழுந்து கும்பிடலுங்கிற ஆசை, தனக்கு மத்த வங்க சிலைவச்சுக் கொண்டானுங்கிற ஆசை–இல்லாத... அரசியல் பிரமுகரு யாருமே நாட்டிலே இன்னிக்கு இல்லே. மனுஷனைப் பலவீனப்படுத்தணும்னா–முதல்லே அவனைத் தெய்வமாக்கணும். ஒருத்தனைத் தெய்வமாக்கி விட்டா அப்புறம் அவனைத் தனியாப் பலவீனப்படுத்த வேண்டியதில்லே. அவன்தான் மனுஷன்கிறதை...மறக்கச் செய்யிறதே ஒரு பலவீனம்தான்.”

“சொல்லாமலே ஒரு கமிட்டி ஸெட் அப் பண்ணி பேப்பர்லே அறிக்கை விட்டுடலாமா?”

நெ–11