பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
169
 

– பாலில் நஞ்சுக்கலப்பதைப் போன்றது. திலகரிலிருந்து காந்தி வரை தன்னலம் கருதாமல் வளர்த்த மாபெரும் தேசிய இயக்கம் இன்று ஒரு சாதாரண அரசியல் கட்சியாகிவிட்டாலும்–அதில் பல்வேறு கட்சிக்காரர்கள் ஊடுருவுகிற அளவு அது பலவீனப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சுயநல நோக்கங்களுக்காகத் தேசியக் கட்சியில் ஊடுருவியிருக்கிற ஒவ்வொருவரும் அந்த அந்த அளவுக்குக் கட்சியைப் பலவீனப் படுத்துகிறார்கள் என்றே கூறவேண்டும். சமீபத்தில் ‘பஸ்ருட் விஷயமாக’ நடந்த முடிவும் இதையே நிரூபிக்கிறது. கட்சியிலிருந்து உண்மையும் நியாயமும் விலகிப் போய்க் கொண்டேயிருக்கின்றன. உண்மைத் தொண்டர்களும், அன்பர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது கேவலமான நிலை அரசியல், தொண்டாக இருந்த காலம் போய் வசதியுள்ளவர்கள் முதலீடு செய்யும் ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. அப்படித் தான் நமது புதிய நிதி மந்திரியும் அரசியல் தொழிலில் இப்போது முதலீடு செய்திருக்கிறார் போலும்...’

படிக்கப் படிக்க கமலக்கண்ணனுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. காந்திராமனைப் போன்றவர்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏன் தன்னை இவ்வளவு தீவிரமாக எதிர்க் கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் குமுறினார் அவர். தன் செல்வாக்கிற்கும், செல்வத்திற்கும், பதவிக்கும் அவர்கள் ஏன் பயப்படுவதில்லை என்பது அவருக்கும் வேடிக்கையாகவே இருந்தது.

முதலமைச்சர் விரும்பாததன் காரணமாகச் சிலை வைக்கும் யோசனை கைவிடப்பட்டதாக அன்றைய மாலைத் தினசரிகளில் அவரே அனுப்பிய செய்திகள் வந்திருந்தன. மறுநாள் காலை தினக்குரலிலும் அதே செய்தி வந்தது. திடீரென்று பத்திரிகைகளின் ஆசிரியர் கடிதப் பகுதியில் கமலக்கண்ணன் இராஜிநாமா செய்ய வேண்டுமென்று கோரும் கடிதங்கள் நிறைய வரலாயின. சில பத்திரிகைகள் அவர் ராஜிநாமா செய்வாரென்று தாமாகவே ஹேஷ்யச் செய்தி வேறு வெளியிட்டிருந்தன.