பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

175


“காரியத்தை முடிச்சுக் கொடுத்தோம். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சிட்டுது. இதுலே வருத்தப் படறத்துக்கு என்ன இருக்கு?” என்றான் கலைச்செழியன்.

“என்ன இருந்தாலும் அவரு நம்மளவரு, நீ அந்த போட்டோவைக்கூட வித்திருக்கப்படாது கலை...” எனறாள் மாயா.

“இதெல்லாம் பார்த்தா முடியுமா! காத்துள்ளபோதே துாத்திக்கணும். அந்தப் போட்டோ விலை போகாத காலத்துலே அதை விற்கவே முடியாதே?”

“என்னவோ...எனக்குப் பிடிக்கலை...”

“உனக்குப் பிடிக்காட்டி அதுக்கு நான் இன்னாசெய்ய முடியும்...? நல்ல ‘சான்ஸ்’ அடிச்சுது வித்துப்பிட்டேன்..”

“போற போக்கைப் பார்த்தால் ‘தினக்குரலை’க்கூட ரொம்ப நாளு நடத்த மாட்டாரு போலிருக்கு...நாம மறுபடி ‘பிரகாஷ் பப்ளிஸிட்டியிலே’ தீவிரமாக இறங்கவேண்டியது தான்”–என்று குறைபட்டுக்கொண்ட பிரகாசத்தை நோக்கி,

“ஏன் அப்பிடிச் சொல்றிங்க?...பத்திரிகையை நிறுத்தறாப்பலே இப்ப அவருக்கு என்ன அத்தினி மொடை வந்திரிச்சு...?” என்று பதிலுக்குக் கேட்டாள் மாயா.

“மந்திரியா வரணுங்கறதுக்காகத்தான் அவரு பத்திரிகையே தொடங்கினாரு...மந்திரியா வந்தாச்சு...இப்பவோ இனிமே மந்திரியா நீடிக்க முடியும்னு தோணலை...அப்புறம் எதுக்குப் பத்திரிகை...? மாசா மாசம் இருபதினாயிரம் ரூபாயை முழுங்குதே...! தண்டச் செலவா?”

“இப்பிடி எத்தினியோ தண்டச் செலவு செய்யிறாரே அவரு? எல்லாத்துக்கும் சேர்த்து எதிலியோ வரவு இருக்கக் கண்டுதானே செய்யிறாரு?”

“தண்டச் செலவிலேயே பிரயோசனமுள்ள தண்டச் செலவு, பிரயோசனமில்லாத தண்டச் செலவுண்ணு இரண்டு விதம் இருக்கு இது இனிமே அவருக்குப் பிரயோசனமில்லாத தண்டச்செலவுதானே?...” என்றான் பிரகாசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/177&oldid=1049495" இலிருந்து மீள்விக்கப்பட்டது