பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
179
 


அமைச்சனாகிய தன் வீட்டின் முன்பே அதே கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு உண்ணாவிரதமிருப்பதும் அதைக் கண்டிக்க ஒருவரும் முன்வராததும்–என்னவோ போலிருந்தது கமலக்கண்ணனுக்கு, டிரான்ஸ்போர்ட் மந்திரியிலிருந்து–முதன் மந்திரி வரை அனைவரும் தன்னைக் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் வெளியேற்றி விடவே விரும்புகிறார்களோ என்றும் சந்தேகம் தோன்றியது அவருக்கு. இந்த விஷயத்தில் டிரான்ஸ்போர்ட் மந்திரி தன்னைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டுமென்பதும் தெளிவாக அவருக்குப் புலனாகியது. டெல்லி மந்திரி ரமேஷ்சிங் விஜயத்தின் போது கூடத் தன்னையே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுப் போயிருந்த முதலமைச்சர் இப்போது ஏன் இப்படி மாறினார் என்பதை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

கடைசியில் வந்தது வரட்டும் என்று துணிந்து தானாகவே முதலமைச்சரைப் பார்க்க அவர் வீட்டிற்குத் தனியே சென்றார் கமலக்கண்ணன். அவர் செல்லும்போது அதிகாலை ஏழுமணி. முதலமைச்சர் வீட்டில் கூட்டம் எதுவும் இல்லை. உடனே அவரைப் பார்க்க முடிந்தது. பேச்சை அவரிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் கமலக்கண்ணனுக்குத் தெரியவில்லை. அவராக எதுவும் பேச ஆரம்பிக்கவும் இல்லை. விநாடிகள் மெளனமாகப் போய்க்கொண்டிருந்தன.

“என்னகாரியமா வந்தீங்களோ?” சிறிது நேரத்திற்குப் பின் முதலமைச்சரே கேட்டார்.

“இல்லே...வந்து...எட்டு...நாளா வீட்டு முன்னாடி யாரோ உண்ணாவிரதம் இருக்காங்க..ஒரே கூச்சல்... ‘ஒழிக ஒழிக’ன்னு கத்தறாங்க...ராஜிநாமா செய்யணும் னும் கூப்பாடு போடறாங்க...”

“என்ன செய்யலாம்? ஜனநாயகத்தில் இப்படி நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாதவை.”

“நம்ப கட்சிக் கொடியையே பறக்க விட்டுக்கிட்டு நம்ம ஆளுங்களே செய்யறாங்க. வேறொருத்தர் செய்தாப் பரவாயில்லே...நம்மளிவங்களே செய்யிறப்பத்தான் மனசுக் குக் கஷ்டமா இருக்கு...?”