பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17

வெளியே போய்த் தமிழ்ப் புலவரை அழைத்து வரச் சொல்லி அலுவலகத்துப் பையனை அனுப்புவதற்காகச் சென்றாள் அவள். ‘கமலக்கண்ணன்’ மற்றக் கடிதங்களில் மூழ்கினார். அவர் மனத்திலோ இனம்புரியாத ஒரு துறு துறுப்பு. பொது வாழ்க்கையில் தீவிரமாக இறங்கி, மேடை, ரோஜாப்பூமாலை, கைதட்டல், வரவேற்பு மடல் ஆகிய சுகங்களில் மூழ்கிப் பேரும் புகழும் எடுக்க வேண்டுமென்று அவர் இதயத்தின் ஒரு கோடியில் ஆசை அரும்பியிருந்தது. அதற்குக்காரணம் முன்தினம் மாலையில் அவர் கலந்து கொண்ட ஒரு மணி விழாவாயிருந்தது. உள்ளூர்ப் பிரமுகர் ஒருவருடைய அறுபதாண்டு நிறைவுவிழாவுக்குப் போயிருந்தார் அவர். அவரும் குறிப்பிடத்தக்க கணிசமான நன்கொடை அந்த விழாவுக்குக் கொடுத்திருந்ததனால் ஒரு மரியாதைக்காக அவரை அழைத்திருந்தார்கள் விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள். போய்ப்பார்த்தபோது அவருக்கு வியப்பாயிருந்தது. தமிழில்மேடைப்பேச்சுப் பேசுகிறவர்கள்தான் எத்தனை விதவிதமாக வளர்ந்திருக்கிறார்கள்? எவ்வளவு கை தட்டல்? எவ்வளவு கூட்டம்? ஒரே வியப்பாயிருந்தது அவருக்கு கிளப், சேம்பர் அஃப் காமர்ஸ், டென்னிஸ் கோர்ட் இதைத் தவிர வேறு எங்குமே அதிகம் போயிராத அவருக்குப் புகழ்மயமான இன்னொரு புதிய உலகமே இந்த மணிவிழாவில் தெரிந்தது. அங்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையில் ஒரு தீவிர ஆசை அவருள் அரும்பி யிருந்தது. அதன் விளைவே இன்று திடீரென்று அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாகக் காந்திய சமதர்ம சேவா சங்கம் எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடத்துகிற கூட்டத்துக்குத் தலைமை தாங்க இணங்கியது. உள்ளே ஒரு தாகம் வந்திருந்தது அவருக்கு. மணிவிழாக் கொண்டாட்டத்துக்கு உரியவரை எல்லாரும் புகழ்ந்தது–வசனத் திலும், கவிதையிலும் அவருக்கு வரவேற்பு மடல்கள் வாசித்தளித்தது–எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்துக் கூட்டம் கூட்டமான மனிதர்களால் புகழப்படுவது என்ற வெதுவெதுப்பான சுகத்தில் ஒரு தாயமே உண்டாகியிருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/19&oldid=1016004" இலிருந்து மீள்விக்கப்பட்டது