பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

நெஞ்சக்கனல்


கண்ணனுக்குத் தோன்றியது. சமையற்காரனுக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

பகல் சாப்பாடு முடிந்ததும் இடைவேளை ஓய்வுக்குப் பின் சமையற்காரன் தமிழ்த் தினசரியை ஒரு வரிவிடாமல் படிக்கும்போது அவனுக்கு எல்லா விஷயமும் தானே தெரிய வாய்ப்பிருக்கும் என்று அவர் தனக்குள் எண்ணிக்கொண்டார். ஏதோ நினைத்தவராக கார் டிரைவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரும்படி சமையற்காரனை அனுப்பினார். டிரைவர் வந்து கும்பிட்டுவிட்டு பவ்யமாக ஒதுங்கி நின்றான். சமையற்காரனும் போகவில்லை.

“முன் ஹால்லே பெரிசா ஆளுயரத்துக்கு ஒரு காந்தி படம் மாட்டியிருக்குப் பாரு; அதைக் கழட்டி ‘நீட்டா’க் கட்டி எடுத்துக்கிட்டுப் போயி திண்டிவனத்துக்குப் போற வழியிலே காந்திய சமதர்ம சேவா சங்கம்னு இருக்கே அங்கே கொடுத்திட்டு வந்திடனும்...இப்பவே புறப்படனும்...அந்த ப்ரின்ஸிபல் அம்மா ஏதாவது கேட்டாங் கன்னா என்னோட அன்பளிப்பா இந்தப் படத்தை அனுப்பினேன்னு சொல்லிடு...”

டிரைவர் அப்படியே செய்வதாகக் கூறிவிட்டுப் போனான். படத்தைக் கழற்றிக் கட்டிக்கொடுப்பதில் அவனுக்கு உடனுதவுவதற்காகச் சமையற்காரனும் கூடவே சென்றான்.

சிறிது நேரத்தில் மனைவி வந்து வினவினாள்:

“ஏன் அந்த காந்தி படத்தை எடுக்கச் சொல்லிட்டீங்களா...?”

“ஆமா இனிமே அது எதுக்கு?”

அவள் பேசாமல் போய்விட்டாள். அவர் ‘தினக்குரல்’ காரியாலயத்துக்கு ஃபோன் செய்து பிரகாசத்தைக் கூப்பிட்டார் பிரகாசம் பேசினான்.

“என்ன? எல்லாருக்கும் நோட்டிஸ் கொடுத்தாச்சா?”

“கொடுத்தாச்சு சார் இன்னிக்குச் சாயங்காலம் எடிஷன்தான் கடைசி...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/190&oldid=1049516" இலிருந்து மீள்விக்கப்பட்டது